ஈரோடு : ஈரோட்டில் குடிநீர் குழாயில் தண்ணீர் விநியோகம் செய்யாததை கண்டித்து மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாநகராட்சி 54வது வார்டுக்கு உட்பட்ட குந்தவை வீதி, உப்பு கிணறு சந்து, சீதாக்காதி வீதி, அங்கமுத்து சந்து என சுற்றுப்புற பகுதியில் 350க்கும் மேற்பட்ட குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டப்பணி கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. இதனால், குடியிருப்புகளின் குழாய்க்கு அருகே புதிய குடிநீர் குழாயும் பொருத்தப்பட்டது. இருப்பினும், இரண்டு குழாய்களிலும் முறையாக தண்ணீர் விநியோகம் செய்யவில்லை.இதனால், பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், குழாய்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என கூறி மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியதாவது: 6 மாதத்திற்கு மேலாக குடிநீர் குழாய் பணிகள் மந்தகதியில் நடந்து வருகிறது. எங்கள் பகுதிக்கு மாநகராட்சி குடிநீர் வாகனம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். கடந்த 3 மாதமாக செய்த பணிகளையே திரும்ப திரும்ப செய்து, எங்களை அலைக்கழித்து வந்தனர். 3வது மாடியில் வசிக்கும் மக்கள் குடிநீருக்காக காத்திருந்து தண்ணீரை மாடிக்கு எடுத்து செல்ல முடியவில்லை. வீடுகளில் உள்ள இணைப்பில் குடிநீர் விநியோகம் செய்யுங்கள் என நாங்கள் பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால், அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதனால், நேற்று குடிநீர் விநியோகம் செய்ய வந்த வாகனத்தை சிறைபிடித்தோம். இது குறித்து தகவல் அறிந்த ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சில நாட்களில் பணிகளை முடித்து வீடுகளுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன்பேரில், போராட்டத்தை கைவிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்….
The post குடிநீர் விநியோகம் செய்யாததை கண்டித்து மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்து போராட்டம் appeared first on Dinakaran.