இரும்பாலை, 4 வழிச்சாலைக்கு சொன்னதைபோல ‘இலவச வீடு, அரசு வேலை என எங்களையும் ஏமாற்ற வேண்டாம்’

சேலம்: சேலம் இரும்பாலை மற்றும் 4 வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தவர்களை போல, இலவச வீடு, அரசு வேலை கொடுப்பதாக எங்களையும் ஏமாற்ற வேண்டாம் என 8 வழி பசுமைச்சாலை தொடர்பான ஆட்சேபனை கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். சேலத்திலிருந்து சென்னைக்கு 277 கி.மீ., தொலைவில் அமைக்கப்படவுள்ள 8 வழி பசுமை விரைவுச்சாலைக்கு விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான ஆட்சேபனை இருந்தால், கலெக்டர் அலுவலகத்தில தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து பசுமை விரைவுச்சாலையால் பாதிக்கப்படும் 500க்கும் மேற்பட்டோர் தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்தனர்.

இவர்களுக்கான முதற்கட்ட விசாரணை கடந்த 6ம் தேதி தொடங்கியது. நேற்று நிலஎடுப்பு அலகு-2, அலகு-3, அலகு-4க்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கான முதற்கட்ட விசாரணை நடந்தது. சேலம் நெத்திமேட்டில் உள்ள தெற்கு தாசில்தார் அலுவலகத்தில், டிஆர்ஓ சுகுமார், தனித்தனியாக விவசாயிகளை அழைத்து விசாரித்தார். அப்போது ஆட்சேபனைக்கான காரணத்தை, எழுத்துப்பூர்வமாக விவசாயிகள் அளித்தனர். முன்னதாக, விசாரணையில் கலந்து கொள்ள வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக வந்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “8 வழி பசுமைச் சாலை வேண்டவே வேண்டாம் ஏற்கனவே, சேலம் இரும்பாலை மற்றும் 4 வழிச்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளிடம் கூறிய வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. தற்போது எங்களையும் அதுபோல ஏமாற்ற வேண்டாம்,” என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: