திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி சிலை மற்றும் சூலம் மாயமானதாக எஸ்பியிடம் கோயில் இணை ஆணையர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சுவாமி சிலைகளை கணக்கிடும் பணி கடந்த மாதம் 15ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடந்தது. தொல்லியல் ஆய்வாளர்கள் முன்னிலையில், சிலை மதிப்பீடு ஸ்தபதிகள், கோயில் ஊழியர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிலைகளின் உயரம், எடை, உருவான காலம் போன்றவற்றை துல்லியமாக கணக்கிட்டு, ஏற்கனவே பதிவேடுகளில் உள்ள விபரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
அதேபோல், அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள துர்க்கையம்மன் கோயில், சோமாசிபாடி சுப்பிரமணியர் கோயில், அடி அண்ணாமலை கோயில்களில் உள்ள சுவாமி சிலைகளும் கணக்கிடப்பட்டு சரிபார்க்கப்பட்டன. தற்போது வழிபாட்டில் உள்ள சிலைகள் மற்றும் பாதுகாப்பு பெட்டக அறையில் வைக்கப்பட்டுள்ள பழைய சிலைகளும் கணக்கிடப்பட்டது. மேலும், தற்போதுள்ள அனைத்து சிலைகளையும் புகைப்படம் எடுத்து கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், கடந்த 1957 கோயில் பதிவேட்டில் இடம் பெற்றுள்ள சுமார் ஒன்றரை அடி உயர ஐம்பொன் தண்டாயுதபாணி சுவாமி சிலையும், கடந்த 1982 பதிவேட்டில் இடம் பெற்றிருந்த ஒன்றரை அடி உயர பித்தளை சூலமும் தற்போது காணவில்லை என்பது தெரியவந்தது.
மேலும், 1976, 2002, 2017ல் நடந்த அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகத்தின்போதும், தண்டாயுதபாணி சுவாமி சிலை மற்றும் சூலம் இருந்ததற்கான எந்த ஆவணமும் இல்லை. எனவே, கோயில் சிலைகள் பதிவேடுகளில் உள்ள சிலையும், சூலமும் எப்படி மாயமானது, எப்போது என்பது புதிராக உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயாவுக்கு, இதுகுறித்து கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, நேற்று எஸ்பி பொன்னியிடம் கோயில் இணை ஆணையர் புகார் அளித்தார். புதிய இணை ஆணையர் ஞானசேகரன், கடந்த ஏப்ரல் 5ம் தேதி பொறுப்பேற்றதும், சிலைகள் அனைத்தையும் சரிபார்க்க உத்தரவிட்டதால், விவகாரம் வெளியில் வந்துள்ளது.தமிழகம் முழுவதும் கோயில் சிலைகள் மாற்றப்பட்டதாகவும், மாயமானதாகவும் சமீபகாலமாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலிலும் சுவாமி சிலையும், சூலமும் மாயமானதாக இணை ஆணையர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!