தாய்லாந்தில் குகை மீட்பு பணியில் ஈடுபட்ட கடற்படை முன்னாள் வீரர் ஆக்ஸிஜன் தீர்ந்ததால் பலி

மே சாய் : தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளரை மீட்கும் பணியில் ஈடுபட்ட கடற்படை முன்னாள் நீர்மூழ்கி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுபவம் வாய்ந்த வீரருக்கு இந்த நிலைமை என்றால், சிறுவர்கள் எப்படி நீண்ட தூரம் நீந்த வைக்க முடியும் என்ற கேள்வி எல்லோரிடமும் எழுந்துள்ளது.  

 தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்ட 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் ஆகியோர் அங்குள்ள தாம் லுவாங் குகைக்குள் கடந்த மாதம் 23ம் தேதி சாகச பயணம் மேற்கொண்டனர். குகைக்குள் சுமார் 4 கிமீ தூரத்துக்கு அவர்கள் சென்று விட்டனர். அப்போது, கனமழை பெய்ததால் குகைக்குள் நீண்ட தொலைவுக்கு வெள்ளம் புகுந்து அடைந்து விட்டது. இதனால். அவர்களால் வெளியேற முடியவில்லை. அவர்களை மீட்க சர்வதேச உதவி நாடப்பட்டது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் இருந்து நீர்மூழ்கி வீரர்கள் மீட்பு பணிக்கு வந்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த  இரண்டு வீரர்கள், குகையின் குறுகலான பகுதியில் நீண்ட  தூரம் நீந்தி பட்டயா பீச் என்ற அகலமான பகுதியை அடைந்தனர். அங்கு  ஒரு மேடான பகுதியில் 12 சிறுவர்களும், கால்பந்து பயிற்சியாளரும் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து, உடலை வெப்பமூட்டும் போர்வை ஆகியவை வழங்கப்பட்டன.  சிறுவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு போன், இன்டர்நெட் வசதிகள் செய்யப்பட்டன. சிறுவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், தாய்லாந்து கடற்படையின் முன்னாள் நீர்மூழ்கி வீரர் சமன் குணன் என்பவர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட முன்வந்தார். குகைக்குள் சிறுவர்களை சந்தித்து விட்டு அவர் மீண்டும் நீந்தி வெளியே வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர் எடுத்துச் சென்றிருந்த ஆக்ஸிஜன் தீர்ந்து விட்டது. அப்போது, அவர் சுயநினைவை இழந்தார். அவருடன் சென்ற நண்பர் அவருக்கு உதவ முயன்றார். ஆனால், அவர் இறந்து விட்டார். இது, தாய்லாந்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த  கடற்படை வீரர் இறந்தது, குகையின் அபாயத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளது.  இதனால், அவர்களை பாதுகாப்பாக மீட்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.

குறைவான நேரமே உள்ளது

‘குகைக்குள் சென்ற கடற்படை வீரரே இறந்து விட்டார் என்றால், சிறுவர்களை பாதுகாப்பாக மீட்க முடியுமா’? என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தாய்லாந்து கடற்படை கமாண்டர் அபாகோன், “மீட்பு பணியில் ஒரு வீரரை இழந்த போதிலும், சிறுவர்களை பத்திரமாக மீட்க முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை. அதிக முன்னெச்சரிக்கையுடன் அவர்கள் மீட்கப்படுவர். சிறுவர்களால் குகைக்குள் நீண்ட காலம் இருக்க முடியும் என முதலில் நினைத்தோம். ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. அவர்களை மீட்க குறைவான நேரமே உள்ளது. மழை தீவிரமாக பெய்வதற்குள் அவர்களை மீட்க வேண்டும்’’ என்றார்.

உலக கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டிக்கு அழைப்பு

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர் கால் பந்தாட்ட அணி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியை நடத்தும் பிபா அமைப்பின் தலைவர் கியானி இன்பான்டினோ, தாய்லாந்து கால்பந்து சங்க தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘குகைக்குள் சிக்கிய கால்பந்தாட்ட அணி வீரர்கள் விரைவில் மீட்கப்பட்டு குடும்பத்துடன் இணைவர் என நம்புகிறோம். அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால், ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் 15ம் தேதி நடைபெறும் உலக கோப்பை கால்பந்தாட்ட இறுதி போட்டியில் அவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பதில் பிபா மகிழ்ச்சி அடைகிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: