வேடசந்தூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு கொள்ளையடித்தார் ஜெயலலிதா: ‘பெற்றுக்கொண்டார் டிடிவி தினகரன்’ என்றும் குற்றச்சாட்டு

வேடச்சந்தூர்: ‘‘ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி.தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு அந்த பணத்தால், வெற்றி பெற்ற 18 எம்எல்ஏக்கள், அதிமுகவிற்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்,’’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேடசந்தூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு அண்ணா திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது:18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில், ஒரு நீதிபதி சரி என்றும், ஒரு நீதிபதி சரி இல்லை என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். 3வது நீதிபதிக்கு இந்த வழக்கு சென்றுள்ளது. 3வது நீதிபதி சரி இல்லை என்று சொன்னால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாம். அதன் பிறகு ஃபுல் பெஞ்ச் உள்ளது. அங்கு சென்று தீர்ப்பு வருவதற்குள் நான்கைந்து ஆண்டுகளாகி விடும். இப்போது தங்கதமிழ்செல்வன் வழக்கை வாபஸ் பெறப்போவதாக நாடகமாடுகிறார். அப்படி என்றால், சபாநாயகர் எடுத்த முடிவு சரி என்றுதானே அர்த்தம். அவர் 9 மாதங்களுக்கு பிறகு தினகரனால் தூக்கி எறியப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியை உடைத்தவர் டிடிவி.தினகரன். 18 எம்எல்ஏக்களை பிடித்து தினகரன், கவர்னரிடம் மனு கொடுத்தார். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு, நீக்கப்பட்ட துரோகி அவர். இன்று வரை கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஜெயலலிதா வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி, பணத்தை போட்டு, எங்களை அனைத்து இடங்களிலும் வெற்றி பெற செய்ததைப் போலத்தான் 18 பேரையும் எம்எல்ஏவாக்கினார். ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட கேடி, ரவுடிதான் தினகரன். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ‘கேப்பையில் நெய் வடிகிறது என்றால், கேட்பவனுக்கு எங்கே போச்சு அறிவு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். இந்த 18 பேரும் போய் விட்டால் ஆட்சி நாசமாகப் போய் விடுமா?ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, டிடிவி.தினகரன் மூலம் பெற்றுக்கொண்டு, வெற்றி பெற்ற 18 எம்எல்ஏக்களும் இப்போது அதிமுகவிற்கே துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மைசூர், அமெரிக்கா என ஜாலியாக சுற்றுப்பயணம் செய்தார்கள். இதைப் பார்த்துக் கொண்டு சும்மாவா இருக்க முடியும்? எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவர் மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் மனு கொடுத்தார்கள். சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி ஒரு மாதம் வரை அவகாசம் கொடுத்தும், பதில் வராததால்தான், அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் அறிக்கை: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “ஜெயலலிதாவின் புகழை வைத்து 30 வருடங்களுக்கும் மேலாக உடனிருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர், அவருக்கு தெரியாமல் தவறான வழியில் கொள்ளையடித்தனர். அந்த பணத்தை வைத்து, தினகரன் அரசியல் நடத்தி வருகிறார் என்று கருத்துப்பட பேசினேனே தவிர, ஜெயலலிதாவை பற்றி தவறாக எந்த கருத்தையும் நான் பேசவில்லை. நான் என்றைக்கும் ஜெயலலிதாவின் விசுவாசி என்பது அனைவருக்கும் தெரியும்,’’ என்று கூறியுள்ளார்.சீனிவாசனும்... தீரா சர்ச்சை பேச்சுகளும்...

* மதுரை பொதுக்கூட்டத்தில்: ‘‘அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா இட்லி, சட்னி சாப்பிட்டதாக நாங்கள் சொன்னதெல்லாம் பொய்தான். எங்களை மன்னித்து விடுங்கள்.

* திண்டுக்கல்லில் நடந்த அரசு நிகழ்ச்சியில்: துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரத பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பேசினார்.

* ‘பிரதமர் யார் என்பதே அமைச்சருக்கு தெரியவில்லை’ என்று சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் சரமாரியாக அணி வகுத்தன.

* அத்தோடு விட்டாரா  என்றால் இல்லை;  ‘பாரத பிரதமர் எம்ஜிஆர்’ எனக்கூறியும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: