மண் தரையில் முட்டையிட்டு அடைகாக்கும் நெடுங்கால் உள்ளான் : சாமித்தோப்பு உப்பள பகுதியில் கண்டுபிடிப்பு

நாகர்கோவில்: நெடுங்கால் உள்ளான் பறவை தரையில் முட்டையிட்டு, அடைகாப்பதை குமரி மாவட்ட பறவைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் எஸ்.எஸ்.டேவிட்சன் கண்டுபிடித்துள்ளார். நெடுங்கால் உள்ளான் என்ற பறவை நீண்ட கால்களை கொண்ட கரை பறவைகளில் ஒன்று ஆகும். உப்பளம், சதுப்பு நிலங்களின் கரையோரங்களில், தரையில் கூடுகளை கட்டி, முட்டைகள் இடும். உப்பளங்களில் உள்ள புழு, பூச்சிகள், தவளைகள், சிறிய மீன்கள், மீன் முட்டைகள், நண்டுகள், சிறிய நத்தைகள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றன. உடல் அளவில் அதன் நீண்டகால்கள் சிவப்பு நிறத்தில், உடல் உயரத்தில் 60 சதவிகிதம் உள்ளது. வெள்ளை நிறத்தில் உள்ள இப்பறவையின் இறகு பகுதிகள் கறுப்பு நிறத்தில் உள்ளது. பார்ப்போரை பரவசப்படுத்தும் இப்பறவையினம் கூடுகட்டி முட்டையிட்டு அடைகாக்கும்போது கூட்டமாக, பாதுகாப்பான இடத்தில் கூடுகளை அமைக்கின்றன.

ஏதாவது பறவையோ, மிருகங்களோ, மனிதர்களோ கூடுகளின் பக்கத்தில் போனால், அனைத்து பறவைகளும், கூட்டைவிட்டு பறந்து, எச்சரிக்கை ஒலி எழுப்பி, அருகில் வந்தவரை தாக்க முயற்சிக்கும். குமரி மாவட்டத்திலும் இப்பறவையினங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மாவட்டத்தில் பறவைகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, குமரி மாவட்ட பறவைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் எஸ்.எஸ்.டேவிட்சன் சாமிதோப்பு உப்பளத்தில் நெடுங்கால் உள்ளான் தரையில் கூடு அமைத்து முட்டைகள் இட்டு அடைகாப்பதை கண்டுபிடித்தார்.

இது தொடர்பாக எஸ்.எஸ்.டேவிட்சன் கூறுகையில், ‘சாமித்தோப்பு உப்பளம் மணக்குடி பறவைகள் பாதுகாப்பு மையத்தின் மிக அருகில் உள்ளது. தரையில் முட்டை இடுவதால் நெடுங்கால் உள்ளான் பலமுனை தாக்குதலுக்கு ஆளாகின்றது. பகலில் காகம், பருந்து, வாத்து, பூனை ஆகியவை பறவை முட்டைகளை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அதுபோல, இரவில் ஆந்தை, காட்டுப்பூனை போன்றவைகளால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. பல அச்சுறுத்தல்களுக்கு உட்பட்ட இப்பறவை இனத்தைப் பாதுகாக்க குறிப்பிட்ட இனப் பாதுகாப்பு என்ற கருத்தை செயலளவில் செய்யவேண்டும்’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: