வருமான வரி சோதனை 3 நாளுக்கு பிறகு நிறைவு; மநீம பொருளாளர் ரூ80 கோடி வரிஏய்ப்பு: ரூ11.5 கோடி ரொக்கம் சிக்கியது

திருப்பூர்: மக்கள் நீதி மய்யம் மாநில பொருளாளருக்கு சொந்தமான திருப்பூரில் உள்ள வீடு, நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக மேற்கொண்ட சோதனை நேற்று நிறைவு பெற்றது. இதில் ரூ.80 கோடி கணக்கில் காட்டாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ரூ.11.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் உள்ள பிரிட்ஜ்-வே காலனி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பொருளாளராக உள்ளார். இவருக்கு திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்-வே காலனி பகுதியில் ‘அனிதா டெக்ஸ்காட்’ என்ற நூல் வர்த்தக நிறுவனமும், பனியன் நிறுவனமும் உள்ளது. இவர், அரசுக்கு ‘அம்மா பெட்டகம்’, முகக்கவசம், பிபிடி கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயாரித்து கொடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார். இவருடைய நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் கடந்த 17ம் தேதி மதியம் முதல் சந்திரசேகருக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். திருப்பூர், தாராபுரம், சென்னையில் இந்த சோதனை நேற்று முன்தினம் 2வது நாளாக நீடித்தது.  நள்ளிரவு வரை நீடித்த சோதனையில் ரூ.3.5 கோடி ரொக்கம் சிக்கியது. பல்வேறு ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். இதில் திருப்பூர், தாராபுரம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருக்கும் கணக்கில் காட்டாத ரூ.80 கோடி மதிப்பிலான சொத்து உள்ளிட்ட ஆவணங்கள் சிக்கியது. முதல் நாளில் ரூ8 கோடியும், 2ம் நாளில் ரூ3.5 கோடியும் என மொத்தம் ரூ.11.5 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இந்தநிலையில் 3-வது நாளாக நேற்று காலை 6 மணிக்கு மீண்டும் சந்திரசேகரின் நிறுவனத்துக்கு அதிகாரிகள் சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்தில் சோதனையை முடித்து பறிமுதல் செய்த சில ஆவணங்களை ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தனர். ஒரு சில ஆவணங்களை கொண்டு சென்றனர். வாக்காளர்களுக்கு தருவதை தடுத்துவிட்டோம்; வருமான வரித்துறை அறிவிப்புமநீம பொருளாளர் நிறுவனத்தில் நடந்த சோதனை குறித்து  வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி வருமானவரித்துறை பண நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது. திருப்பூர், தாராபுரம், சென்னையில் 8 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.11.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ரூ.80 கோடிக்கு கணக்கில் காட்டப்படாத வருமானம் கண்டறியப்பட்டது. கணக்கில் காட்டாத பணத்தை தொழில் முதலீடு செய்துள்ளனர். மேலும் ஏராளமான நிலம் வாங்கி குவித்துள்ளனர். மேலும் விசாரணை நடக்கிறது. கணக்கில் காட்டப்படாத பெரும் தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், அது தேர்தலின்போது வாக்காளர்களுக்கு தரப்படுவதற்காக வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாக நடக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது. …

The post வருமான வரி சோதனை 3 நாளுக்கு பிறகு நிறைவு; மநீம பொருளாளர் ரூ80 கோடி வரிஏய்ப்பு: ரூ11.5 கோடி ரொக்கம் சிக்கியது appeared first on Dinakaran.

Related Stories: