தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம்: புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம்

புதுச்சேரி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரியிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் நடத்திய பேரணியை போலீசார் கட்டுப்படுத்த முயன்ற போது கலவரம் வெடித்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் இந்தியாவை உலுக்கியது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட், மதிமுக, உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் காரணமாக அரசு பேருந்து, தனியார் பேருந்துகள், டெம்போக்கள் ஓடவில்லை. இதேபோன்று புதுச்சேரியின் நகரப் பகுதியில் உள்ள கடைகள், பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட் உள்ளிட்ட எந்தவொரு கடையும் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் காலை 6 மணி முதல் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்ற கோஷத்தை முன்னிருத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கை என்னவென்றால், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த போராட்டம் மாலை வரை அறவழிப் போராட்டமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். எப்பொழுதும் பரப்பரப்பாக காணப்படும் புதுச்சேரி பேருந்து நிலையம், இந்த போராட்டம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் தமிழக அரசு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அதனால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்பட்டு வடக்கூடாது என்பதற்காக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

போராட்டம் காரணமாக புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை பேருந்து நிலையத்திற்கு வந்தவர்களும், மருத்துவமனைக்கு வந்தவர்களும் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள். தற்போது திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், பல்வேறு அமைப்புகளின் முற்றுகை போராட்டம், அதேபோன்று முதல்வர் எடப்பாடியின் கொடும்பாவியை எரிக்கும் போராட்டம், தமிழக அரசு பேருந்துகளை சிறைபிடிக்கும் போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்கள் அரங்கேறியிருப்பதால் பதற்றமான சூழ்நிலை தான் நிலவி வருகிறது. 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: