தேவதானப்பட்டி : தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் பள்ளிவாசல் தெருவில் வசிப்பவர்களுக்கும், காலனி தெருவை சேர்ந்தவர்களுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த மாதம் காலனி தெருவை சேர்ந்த வேலு மனைவி வன்னியம்மாள்(62) இறந்து விட்டார். இவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்லும்போது இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதில் சில கடைகள், வீடுகள் சேதமானது. 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக ஜெயமங்கலம் போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில் நேற்று காலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ஒருவர் காலனி தெரு வழியாக தனது தோட்டத்திற்கு சென்றார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரிடையே மீண்டும் கலவரமாக மாறியது. இருதரப்பினரும் கற்கள், கம்பி, அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்.
