சேலத்தில் 5வது நாளாக 103 டிகிரியை தாண்டிய வெயில் : பொதுமக்கள் தவிப்பு

சேலம்: சேலத்தில், 5வது நாளாக 103 டிகிரியை கடந்து சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். தமிழகத்தில் நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. நாளுக்குநாள் அதிகரித்து வரும் வெயிலால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக, சென்னை, வேலூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில், வெயில் உச்சத்தை அடைந்துள்ளது. நடப்பாண்டு, தமிழகத்தில் வெயில் அளவில், முதல் சதத்தை சேலம் மாவட்டம் பதிவு செய்தது. வெயிலின் தாக்கத்தால், காலை 11 முதல் மாலை 4 மணிவரை வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பணி நிமித்தமாகவும், தவிர்க்க முடியாத காரணங்களாலும் வெளியே வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதனால், கம்மங்கூழ், பழரசக்கடைகள், ஐஸ்கிரீம் பார்லர்கள், தர்ப்பூசணி, நுங்கு, வெள்ளரி விற்பனை கடைகள் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதுகிறது. இதேபோல், பள்ளி விடுமுறையில் உள்ள மாணவர்களும், கிணறு, நீச்சல் குளம் போன்ற நீர்நிலைகளை தேடி செல்கின்றனர்.

சேலத்தின் நடப்பாண்டின் உச்சபட்ச அளவாக, நேற்று முன்தினம் 105.1 டிகிரியாக வெப்பம் பதிவானது. கடந்த 18ம் தேதி 102.2, 19ம் தேதி 101.7, 20ம் தேதி 104.7, 21ம் தேதி 103.6, 22ம் தேதியன்று 103.1, நேற்று முன்தினம் 105.1 மற்றும் நேற்று 103.5 என வெயிலின் அளவு பதிவாகி வருகிறது. கடந்த 5 நாட்களாக, தொடர்ந்து 103 டிகிரியை கடந்து வெயில் வாட்டுகிறது. வரும் நாட்களில், இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே வெயிலை சமாளிக்க, அடிக்கடி தண்ணீர் குடிப்பதுடன், தொப்பி, முக கவசம் போன்றவற்றை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: