காஞ்சிபுரத்தில் கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.48 கோடி சொத்துக்கள் முடக்கம் : அமலாக்த்துறை நடவடிக்கை!

காஞ்சிபுரம் : வங்கி மோசடியில ஈடுபட்ட கனிஷ்க் நிறுவனத்தின் 48 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்த்துறை முடக்கியுள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் மிகப்பெரிய வங்கி மோசடியாக பார்க்கப்பட்டது, கனிஷ்க் ஜூவல்லரி நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ரூ.824 கோடி வங்கி மோசடி செய்ததாகும். கடந்த மார்ச் மாதம் எஸ்பிஐயின் 14 கூட்டமைப்புகள் அளித்த புகாரில், கனிஷ்க் நிறுவனம் ரூ.824 கோடி வங்கி மோசடி செய்ததாக கூறப்பட்டது. இதையடுத்து பூபேஷ் குமார் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். காஞ்சிபுரத்தில் 2007ம் ஆண்டு தங்க நகை உற்பத்தி மையத்தை தொடங்கிய பூபேஷ், பல்வேறு பிரபல நகைக்கடைகள் மூலம் அந்த நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

ஆனால் ஒவ்வொறு ஆண்டும் தவறான கணக்கை காட்டி, கையில் இருக்கும் இருப்பை அதிகமாக காட்டி வங்கியில் கடன்களை பெற்றுள்ளார். இந்த தகவல்கள் அனைத்தும் கடந்த 2017ம் ஆண்டு அம்பலமான நிலையில் எஸ்பிஐ வங்கி சிபிஐயிடம் புகார் அளித்தது. இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையும் ஒரு வழக்குப்பதிவு செய்தது. இதனையடுத்து அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த விசாரணையின் அடிப்படையில் காஞ்சிபுரத்தில் உள்ள கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமாக ரூ.48 கோடி சொத்துக்களை அமலாக்த்துறை முடக்கியுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள புக்கத்துறையில் பூபேஷ்க்கு சொந்தமான நகை உற்பத்தி மையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறை விசாரணையில் கடந்த 2017ம் ஆண்டு பூபேஷ் காட்டிய கணக்கில் கையில் இருக்கும் இருப்பைவிட 3000 கிலோ தங்கம் அதிகமாக இருப்பதாக காட்டியதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கனிஷ்க் நிறுவனத்தின் வங்கி மோசடி குறித்து அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கதுறையின் அடுத்தகட்ட நடவடிக்கையாக சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்து வாங்கப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து, அவற்றை முடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: