ஆம்பூரில் முழு அடைப்பின் போது தனி ஆளாக பஸ் மறியல் செய்த பெண்ணுக்கு ஸ்டாலின் பாராட்டு

சென்னை: முழு அடைப்பு தினத்தன்று, ஆம்பூரில் தனி ஆளாக பஸ்சை மறித்து போராட்டம் நடத்திய தெய்வநாயகியை நேரில் அழைத்து மு.க.ஸ்டாலின் பாராட்டினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திமுக தலைைமயில் அனைத்துக் கட்சிகள் சார்பில் கடந்த 5ம் தேதி முழு அடைப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்தது. அப்போது, ஆம்பூரில் தெய்வநாயகி (54) என்பவர் தனி ஆளாக திமுக கொடியுடன் வந்து சாலையில் சென்று கொண்டிருந்த பஸ்சை தடுத்து நிறுத்தினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் பஸ்சை தடுத்து நிறுத்திய காட்சி பரபரப்பாக வெளியானது.

இதையறிந்து தெய்வநாயகியை சென்னை வருமாறு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று, அவர் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். அவருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தார். பின்னர் தெய்வநாயகி கூறியது: நான் ஆம்பூர் நகர திமுக மகளிர் அணி துணை அமைப்பாளராக இருக்கிறேன். கடந்த 36 ஆண்டுகளாக எத்தனையோ போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். விவசாய குடும்பத்தை சேர்ந்த நான் விவசாயிகளுக்காக நடக்கும் முழு அடைப்பின் போது பஸ் ஓடுவதை பார்த்ததும் ஓடி வந்து தடுத்து நிறுத்தினேன். இன்று செயல் தலைவர் நேரில் அழைத்து பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது. இதுவரை அவரை நான் தொலைவில் இருந்துதான் பார்த்திருக்கிறேன். திமுக தலைவர் கருணாநிதியுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற எனது ஆசையை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: