கோவை: கோவை மற்றும் உதகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் நேற்று கோவை சென்றிருந்த நிலையில் இன்று காலை கோவை வ.உ.சி மைதானத்தில் அகழாய்வு கண்காட்சியை திறந்து வைத்தார். அதேபோல் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ‘ஓராண்டு சாதனைகள் ஓவியங்களாய்’ என்ற தலைப்பில் ஓவிய கண்காட்சியும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மயிலாடும்பாறை, கொடுமணல், கீழடி மற்றும் பொருநை அகழாய்வு குறித்து கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. வரும் 25-ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை கண்காட்சியை மக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தின் ஆட்சியர், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, மக்கள் செய்திதொடர்பு துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், கோவை மாநகராட்சி மேயர், துணைமேயர் உள்ளிட்டோரும் பங்குபெற்றனர். அதேபோல், மிக முக்கியமான துறைசார்ந்த அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர். பின்னர், கோவையில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்ட தொழில்முனைவோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட தமிழக முதல்வர் பேசுகையில், ‘ பல்வேறு தொழில்களின் மையமாக கோவை விளங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 5 முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியுள்ளோம். தகவல் தொழில்நுட்ப துறையிலும் கோவை வேகமாக வளர்ந்து வருகிறது. கோவை மாநகரத்திற்கு தேவைப்படும் கட்டமைப்புகளை நிறைவு செய்யும் வகையில் இந்த பகுதிக்கான புதிய பெருந்திட்டம் ‘மாஸ்டர் பிளான்’ உருவாக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள திறமைமிக்க மனிதவளத்தை மேம்படுத்த நாம் திட்டமிட்டுள்ளோம். அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது என்ற தமிழ்நாடு அரசின் தொலைநோக்கு பார்வையை செயலாக்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் நிறுவப்படும் என தெரிவித்திருந்தோம். அதன்படி அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா ஒன்று பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறினார்….
The post கோவையில் பொருநை அகழாய்வு கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.