×

அருள்வான் விமர்சனம்

மலை கிராமத்தில் காடர் மொழி பேசும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஆரவ், ரம்யா பாண்டியனின் மகள் கிருத்திகா, மற்றவர்களை போல் படிக்க ஆசைப்படுகிறார். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத அவரது வாழ்க்கை சூழல் அதற்கு இடம் தரவில்லை. தானும் படித்து, மலை கிராம சிறுவர், சிறுமியரும் படிக்க ஆசைப்படும் கிருத்திகா, தனியாக மலையை விட்டு நகரத்துக்கு வந்து, கலெக்டர் அருள்நிதியை சந்திக்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை. மலைவாழ் மக்கள் கல்வி பெற்று உயர வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், நேர்மையான கலெக்டர் முத்துவேலாகவே வாழ்ந்திருக்கும் அருள்நிதிக்கு இப்படம் ஒரு மைல் கல்.

அவரது இயல்பான பேச்சும், முதிர்ச்சியான நடிப்பும், அலட்டாத உடல்மொழியும், இப்படியொரு கலெக்டர் நமக்கு வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. பழங்குடி இனத்தவராக ஆரவ், ரம்யா பாண்டியன் நிறைவாக நடித்துள்ளனர். படத்தின் தூண் கிருத்திகா, யதார்த்தமான நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார். படிப்புக்காக ஏங்கும் அவரது காடர் மொழி கோரிக்கை, கல் மனதையும் கரைய வைக்கும். மற்றும் ஜான் விஜய், காளி வெங்கட், விடிவி கணேஷ், ‘பருத்திவீரன்’ சரவணன், வினோதினி ஆகியோரும் கேரக்டருக்கேற்ப நடித்துள்ளனர். மலை, அருவி, காடு, மக்களின் குடில் ஆகியவற்றை கண்முன் கொண்டு வந்துள்ளார், ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார்.

பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் தனி முத்திரை தெரிகிறது. பாடல்கள் கதைக்கேற்ப சிறப்பாக அமைந்துள்ளன. லாரன்ஸ் கிஷோரின் எடிட்டிங் கச்சிதம். கல்வியின் அவசியத்தை சமூக அக்கறையுடனும், நேர்மையுடனும் எழுதி இயக்கிய கணேஷ் விநாயகன், உண்மை சம்பவத்தை எந்த பாசாங்கும் இல்லாமல் சொல்லி, பார்வையாளர்களை கலங்க வைக்கிறார். ஆங்காங்கே ஆவணப்பட சாயல் தெரிந்தாலும், சொல்லியிருக்கும் சப்ஜெக்ட்டுக்காக அதை மறந்துவிடலாம்.

Tags : Kirutika ,Ramya Pandian ,Arav ,Kirithika ,Arulnithi ,
× RELATED அஜித் படம் உள்பட படங்களை நிராகரித்த ஸ்ரீலீலா