கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘துரந்தர்’ மற்றும் இந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி வெளியான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ என 2 பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 2 பாகங்களும் சேர்த்து கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தன. தமிழில் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜூன் ‘துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக நடித்து கவனம் பெற்றார். 40 வயதான ரன்வீர் சிங்கிற்கு 20 வயதான சாரா அர்ஜுன் ஜோடியாக நடித்தது பல்வேறு விமர்சனங்களை தூண்டியது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த வயது வித்தியாசம் குறித்து பேசிய சாரா அர்ஜுன், ‘சோஷியல் மீடியாவில் மட்டும் தான் இப்படிப்பட்ட சலசலப்பெல்லாம் நடக்கிறது. நான் சோஷியல் மீடியாவில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை. அதனால் இதனை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பே எனக்கு அதன் முழு கதையும் தெரியும். கதையின்படி ரன்வீர் சிங்கின் கதாபாத்திரம் ஒரு இளம்பெண்ணை தனது உளவாளி வலைக்குள் வீழ்த்த வேண்டும். அதற்கு இந்த வயது வித்தியாசம் மிகவும் அவசியமானது. கதையின் சூழலுக்கு இந்த தேர்வு முற்றிலும் நியாயமானது என்று கருதினேன். அதனால் தான் அந்த கேரக்டரில் நான் நடித்தேன்’ என்று கூறியுள்ளார்.

