சென்னை: தேனி மாவட்டத்திலுள்ள அல்லி நகரத்தில், கடந்த 1941 ஜூலை 17ம் தேதி பெரிய மாயத்தேவர், மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தம்மா தம்பதிக்கு 5வது குழந்தையாக பிறந்தவர், பாரதிராஜா. சின்னச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட அவருக்கு 3 சகோதரிகள், 3 சகோதரர்கள் என்று 6 பேர் இருக்கின்றனர். பள்ளி படிப்பை சொந்த ஊரில் முடித்த பாரதிராஜா, படிக்கும்போதே இலக்கியங்கள் மீது அதிக ஆர்வம் காட்டினார். பிறகு மேடை நாடகம் எழுதுவதிலும், நடிப்பதிலும், இயக்குவதிலும் தனது கவனத்தை திருப்பிய அவர், ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகங்களை எழுதி, அதை அவ்வப்போது திருவிழா மேடையில் அரங்கேற்றினார். சுகாதார ஆய்வாளராக சில காலம் பணிபுரிந்த அவர், அப்போது மாதம் 75 ரூபாய் சம்பளம் வாங்கினார். பிறகு திரைத்துறையின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சென்னைக்கு வந்தார். இங்கு மேடை நாடகம், வானொலி நிகழ்ச்சி, பெட்ரோல் பங்க் பணி என்று மாறி, மாறி பயணித்து திரைத்துறையில் ஈடுபட தீவிர முயற்சி செய்தார். இறுதியில் இயக்குனர் பி.புல்லையாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பிறகு பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் உதவியாளராக சேர்ந்து, சினிமா பற்றிய நுணுக்கங்களை கற்றுக்கொண்டார்.
குறுகியகாலத்தில் தமிழில் தனது முதல் படமான ‘16 வயதினிலே’ என்ற படத்தை 1977ல் இயக்கினார். இதில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த், காந்திமதி, கவுண்டமணி, சத்யஜித் உள்பட பலர் நடித்தனர். 1977 செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வந்த இப்படம், தமிழ் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. கிராமத்தை மையப்படுத்திய இக்கதையில், சப்பாணி என்ற கேரக்டரில் கமல்ஹாசன், தனது வெள்ளந்தியான குணச்சித்திர நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தினார். மயிலு என்ற கேரக்டராகவே ஸ்ரீதேவி வாழ்ந்திருந்தார். பரட்டை வேடத்தில் ரஜினிகாந்த் நடித்து தனி முத்திரை பதித்தார். இளையராஜா இசையில் உருவான பாடல்களும், பின்னணி இசையும் தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதுநாள்வரை ஸ்டுடியோவுக்குள் அமைக்கப்பட்டிருந்த அரங்கிற்குள்ளேயே அடைபட்டு கிடந்த தமிழ் சினிமா, சற்று மூச்சு வாங்கி அவுட்டோரை எட்டி பார்த்தது. வெளிப்புற படப்பிடிப்பு நடத்துவது மற்றும் இயற்கை காட்சிகளை கேமராவில் படமாக்குவது போன்ற புதிய அத்தியாயங்களை உருவாக்க முக்கிய காரணமாக ‘16 வயதினிலே’ படம் இருந்தது. இப்படம் முழுவதும் இயற்கை வெளிச்சம் நிறைந்த வெளிப்புற பகுதிகளில் மட்டுமே படமாக்கப்பட்டதால், தமிழ் திரைத்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. ஒரு இயக்குனர் என்பவர் யார், படைப்பாளி என்பவர் யார் என்ற ஆளுமையை தனது முதல் படத்திலேயே நிரூபித்து காட்டிய பாரதிராஜா, தொடர்ந்து ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘மண் வாசனை’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கிழக்குச் சீமையிலே…’, ‘கருத்தம்மா’ போன்ற வெற்றி படங்களை கொடுத்து, ‘இயக்குனர் இமயம்’ என்று அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்டார்.
கடந்த 1974ல் தனது அக்கா மகள் சந்திரலீலாவதி என்பவரை திருமணம் செய்துகொண்ட பாரதிராஜாவுக்கு 1976ல் மனோஜ் கே.பாரதி என்ற மகனும், 1979ல் ஜனனி என்ற மகளும் பிறந்தனர். இவர்களில் மனோஜ் கே.பாரதி வெளிநாட்டில் சினிமா பற்றிய மேற்படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வந்தார். இங்கு விக்ரம், மீனா இணைந்து பாடிய ‘காதலிசம்’ என்ற தமிழ் பாடல் ஆல்பத்தை வெளியிட்ட அவர், பிறகு இயக்குனர் மணிரத்னத்திடம் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு தனது தந்தை பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர், நிறைய படங்களில் ஹீரோவாகவும், முக்கிய கேரக்டர்களிலும் நடித்தார். கடந்த 2023ல் மனோஜ் கே.பாரதிராஜா இயக்குனராக அறிமுகமான படம், ‘மார்கழி திங்கள்’. இதில் முக்கிய கேரக்டரில் பாரதிராஜா நடித்தார். மலையாள நடிகை நந்தனா என்பவரை காதல் திருமணம் செய்த மனோஜ் கே.பாரதிக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். ஜனனிக்கு திருமணமாகி மலேசியாவில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார்.
கடந்து வந்த பாதை;
சுகாதார ஆய்வாளராக பணியாற்றியபடி ஊர், ஊராக சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து ரிப்போர்ட் செய்து வந்த பாரதிராஜா, ஒருமுறை பண்ணைபுரம் சென்றபோது, அங்கு இசை அமைப்பில் ஈடுபட்டிருந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரை சந்தித்தார். பிறகு அவர்கள் நண்பர்களாக மாறினார்கள். கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை அமைக்க அண்ணன் பாவலர் வரதராஜனுடன் சென்ற பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் சகோதரர்கள், பிறகு பாரதிராஜாவின் மேடை நாடகத்துக்கு இசை அமைக்க மதுரைக்கு சென்றனர். பாரதிராஜா இயக்கிய மேடை நாடகங்கள் புதுமையாக இருந்தன. இதையறிந்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் அண்ணன் மகன் ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜ், அவர்களுடன் நட்பு கொண்டார். சினிமாவுக்கு சென்றால் பெரிய அளவில் புகழ்பெறலாம் என்று தங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். முதலில் ‘அன்னக்கிளி’ ஆர்.செல்வராஜ் சினிமாவில் சேருவதற்காக சென்னைக்கு வந்தார். பிறகு பாரதிராஜா வந்தார்.
இந்நிலையில் பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோர் சென்னைக்கு வந்தனர். சங்கிலி முருகன் நடத்திய மேடை நாடகங்களுக்கு அவர்கள் இசை அமைத்தனர். இசை கச்சேரி நடத்தவும் சென்றனர். அந்த கச்சேரியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்தார். அப்போது இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ், பிரபல இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் பாரதிராஜாவை உதவியாளராக சேர்த்துவிட்டார். புட்டண்ணா கனகலிடம் ‘இருளும் ஒளியும்’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பாரதிராஜா, அடுத்து கே.ஆர்.ஜி தயாரிப்பில் கிருஷ்ணன் நாயர் இயக்கிய ‘தலைபிரசவம்’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அடுத்து கே.ஆர்.ஜி தயாரிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். தனது படங்களில் பாரதிராஜாவின் திறமையை அறிந்த கே.ஆர்.ஜி., அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார். முத்துராமன் ஹீரோ, ஜெயலலிதா ஹீரோயின், வி.குமார் இசை அமைப்பாளர் என்று முடிவாகி, அப்படத்துக்கு ‘சொந்த வீடு’ என்று பெயரிடப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதா விலகுவதாக தெரிவித்ததால், உடனே அப்படம் கைவிடப்பட்டது.
பிறகு கே.ஆர்.ஜி.யின் அலுவலகத்துக்கு பைனான்சியராக வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் பேசியபோது, ‘மயிலு’ என்ற கதையை பாரதிராஜா சொன்னார். அக்கதை எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு பிடித்ததால், அதற்கு ‘16 வயதினிலே’ என்று பெயரிட்டனர். ‘கல்லுக்குள் ஈரம்’ என்ற படத்தை இயக்கி ஹீரோவாக நடித்த பாரதிராஜா, அப்படத்தை தொடர்ந்து டைரக்ஷனில் மட்டுமே கவனம் செலுத்தினார். கடந்த சில வருடங்களுக்கு முன்புதான் அவர் முழுநேர நடிகராக மாறினார்.
‘நிழல்கள்’, ‘தாவணிக் கனவுகள்’, ‘இதயம்’, ‘தந்துவிட்டேன் என்னை’, ‘காதல் வைரஸ்’, ‘ஆயுத எழுத்து’, ‘ரெட்டைச்சுழி’, ‘பாண்டியநாடு’, ‘நினைத்தது யாரோ’, ‘குரங்கு பொம்மை’, ‘படை வீரன்’, ‘சீதக்காதி’, ‘கென்னடி கிளப்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘மீண்டும் ஒரு மரியாதை’, ‘ஈஸ்வரன்’, ‘ராக்கி’, ‘மாநாடு’, ‘திருச்சிற்றம்பலம்’ உள்பட ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். அவர் நடித்த சில படங்கள் இன்னும் திரைக்கு வரவில்லை. கடைசியாக ‘நிறம் மாறும் உலகில்’, ‘தொடரும்’, ‘தேசியதலைவர்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. கடந்த 49 வருடங்களாக திரையுலகில் வெற்றிக்கொடி பறக்கவிட்டு கொண்டிருந்த இயக்குனர் இமயம் சரிந்தது. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
