
துபாய்: உலகிலேயே மிக உயரமான கட்டிடம் துபாயில் உள்ள புர்ஜ் கலீபா தான். சொகுசு கட்டிடமான புர்ஜ் கலீபாவில் உள்ள வீடுகள், அலுவலகங்களின் விலை விவரம் குறித்து பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிராப்பர்ட்டி ஃபைண்டர் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. புர்ஜ் கலீபாவின் வீடுகளுக்கான கட்டணம் என்பது மாத வாடகை அல்ல, அது அந்த வீடுகளின் ஒட்டுமொத்த விற்பனை விலை ஆகும். அங்கு ஸ்டுடியோ அபார்ட்மெண்ட்ஸ் 1.5 மில்லியன் முதல் 2.5 மில்லியன் வரை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹3.4 கோடி முதல் ₹5.7 கோடி வரை இருக்கும்.
1-பெட்ரூம் அபார்ட்மெண்ட்ஸ் 2.2 மில்லியன் முதல் 4 மில்லியன் வரை, அதாவது சுமார் ₹5 கோடி முதல் ₹9 கோடி வரை இருக்கும். 2-பெட்ரூம் அபார்ட்மெண்ட்ஸ் விலை 4.4 மில்லியன் முதல் 7 மில்லியன் வரை (சுமார் ₹10 கோடி முதல் ₹16 கோடி வரை), 3-பெட்ரூம் லக்சரி யூனிட்டுகள் 8 மில்லியன் முதல் 20 மில்லியனுக்கும் மேல் எகிறுகிறது. பெரும் பணக்காரர்களுக்கும் தனியாக ஒரு பிரிவு இருக்கிறது. அதுதான் பென்ட்ஹவுஸ் அண்ட் அர்மானி குடியிருப்புகள். இதன் விலை 35 மில்லியன் முதல் 100 மில்லியனுக்கும் மேல் (தோராயமாக ₹80 கோடி முதல் ₹230 கோடியைத் தாண்டும்)
இந்த விலைகள் அனைத்தும் துபாய் நிலப்பரிந்துரை கட்டணங்கள், ஏஜென்ட் கமிஷன்கள் மற்றும் ஆண்டு பராமரிப்புக் கட்டணங்கள் சேர்க்கப்படாதது. இவை எல்லாம் சேர்த்தால் இன்னும் கூடுதலாக சில கோடிகள் ஏறும். பாலிவுட் நடிகர் ஷாருக் கான் அங்கு சொகுசு பங்களாவை வைத்திருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த கட்டிடத்தில் 29வது மாடியில் துபாய் ஃபவுண்டன் தெரியும் படியான ஒரு பவர்ஃபுல் 1-பெட்ரூம் அபார்ட்மெண்ட்டை தனது மனைவி சுசித்ராவின் பெயரில் வாங்கியுள்ளார். பிரபலங்கள் சர்வதேசக் கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காம் தனது மனைவியுடன் இணைந்து 2009லேயே புர்ஜ் கலீபாவில் ஒரு வீட்டை வாங்கித் தங்களின் சொத்துப் பட்டியலில் இணைத்துக் கொண்டனர்.
கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா தனது மனைவி பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு திருமணப் பரிசாக புர்ஜ் கலீபா வீட்டை அளித்தார். பின்னர் அவர்கள் அதை விற்றுவிட்டாலும், ‘பணக்காரர்களின் மெகா கிப்ட்’ பட்டியலில் இது இன்றும் முதலிடத்தில் உள்ளது. இத்தாலியின் உலகப் புகழ்பெற்ற பேஷன் டிசைனர் அர்மானி, இந்தக் கட்டிடத்திலுள்ள ‘அர்மானி ஹோட்டலை’ வடிவமைத்ததுடன், தனக்கென ஒரு பிரத்தியேக வீட்டையும் இங்கு வைத்துள்ளார்.

