×

பிளாஸ்ட் விமர்சனம்…

கராத்தே பயிற்சி ஆசிரியர் அர்ஜூன், யாருக்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக்கேட்க வேண்டும் என்ற உணர்வை, தனது மகள் பிரீத்தி முகுந்தனின் மனதில் விதைத்து வளர்க்கிறார். அதன்படியே அவரும் பல்வேறு அநியாயங்களை தட்டிக்கேட்க, பிரச்னையில் சிக்கி உயிருக்கு போராடுகிறார். இதையறிந்து துடிக்கும் அம்மா அபிராமி, ஒருகட்டத்தில் தனது குடும்பத்தினரின் உயிருக்கே ஆபத்து ஏற்படும்போது, கணவர் மற்றும் மகளுடன் சேர்ந்து களத்தில் குதிக்கிறார்.

இதனால் சிலரது உயிர் பறிபோக அவர்கள் காரணமாகிறார்கள். இதையறிந்து கொதிக்கும் வில்லன் கோஷ்டியினர் அவர்களை துரத்த, அர்ஜூன் குடும்பம் என்ன ஆனது என்பது மீதி கதை. இத்தனை வருடங்களாகியும் ‘ஆக்‌ஷன் கிங்’ என்ற பட்டத்தை தக்கவைத்துக்கொள்ளும் அர்ஜூன், மனைவி மற்றும் மகளுடன் சேர்ந்து ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார்.

அவருக்கு ஈடுகொடுத்து அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அபிராமியும், பிரீத்தி முகுந்தனும் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கின்றனர். காதல் காட்சிகளோ, டூயட்டோ இல்லாதது மிகப்பெரிய ஆறுதல். லாஜிக்குகளை மீறிய மேஜிக்குகள், இரண்டரை மணி நேர படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. வில்லன்கள் ஜான் கொக்கேன், அர்ஜூன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் ஆகியோர் வழக்கமான பாணியில் நடித்துள்ளனர்.

அர்ஜூன் தம்பியாக வரும் விவேக் பிரசன்னா, போலீஸ் அதிகாரியாக வரும் ‘வத்திக்குச்சி’ திலீபன் ஆகியோர் மாறுபட்ட நடிப்பில் மனதில் பதிகின்றனர். அதிரடி சரவெடியாக படம் முழுவதும் ஆர்ப்பாட்டமான ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்த பீனிக்ஸ் பிரபுவுக்கு சபாஷ். ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன் கடினமாக உழைத்துள்ளார். ரவி பஸ்ரூரின் பின்னணி இசை, படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்தி இருக்கிறது.

எடிட்டர் பிரதீப் ஈ.ராகவ் பணி கச்சிதம். பெண்களை இளக்காரமாக பார்க்கும் சமூகம், அவர்களுக்குள் மறைந்திருக்கும் பேராற்றலை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் அமைந்தால், எவ்வளவு சக்திவாய்ந்த செயல்கள் நிறைவேற்றப்படும் என்பதை அபிராமி, பிரீத்தி முகுந்தன் கேரக்டர்களின் மூலம் சொன்ன இயக்குனர் சுபாஷ் கே.ராஜ், படத்தின் நீளத்தை குறைத்திருக்க வேண்டும். துணிச்சலான பெண்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக நிற்கும் ஆண்களும் பார்க்க வேண்டிய படம் இது.

Tags : Arjun ,Preeti Mukundan ,Abrami ,
× RELATED கணவர் முன்பே சமந்தாவுக்கு ரசிகர் புரபோஸ்