×

தனது அம்மாவின் நினைவாக ‘மினி’ காட்டை உருவாக்கிய சாயாஜி ஷிண்டே

மும்பை: மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் பிறந்தவர் சாயாஜி ஷிண்டே. தமிழில் பாரதி, தூள், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியில் பல படங்களில் நடித்திருக்கிறார். 92 வயதான தனது தாயின் மீது அதிக அன்பு கொண்டவர் சாயாஜி ஷிண்டே. தனது தாயிடம் சென்று, ‘‘உங்களை எப்போதும் உயிரோடு வைத்திருக்க என்னிடம் சக்தி இல்லை.

ஆனால், உங்களது எடைக்கு நிகராக விதைகளை நிறுத்தி, அவற்றை மகாராஷ்டிரா முழுவதும் நடப்போகிறேன். அவை வளர்ந்து மரமாகி, நிழல் தந்து, பூத்துக் குலுங்கும்போது அதன் நறுமணத்தில் உங்களை நான் உணர்வேன்’’ என்று உருக்கமாகக் கூறிவிட்டு, மரம் நடும் முயற்சியைத் தொடங்கினார். ஐதராபாத்திலிருந்து இரண்டு லாரிகள் முழுவதற்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் மரக்கன்றுகளை வரவழைத்து, தனது கிராமத்தில் வெறும் 2,000 மரங்களுடன் ‘சஹ்யாத்ரி தேவ்ராய்’ என்ற பெயரில் காடுகளை உருவாக்கத் தொடங்கினார்.

இன்று இந்த இயக்கம் 48 வெவ்வேறு இடங்களில் பரவி, லட்சக்கணக்கான மரங்களைக் கொண்ட அடர்ந்த காடுகளாக மாறியுள்ளது. 60 ஆண்டுகளாக ஒரு மரம்கூட இல்லாமல் வறண்டு கிடந்த ஒரு கிராமத்தில், சாயாஜி ஷிண்டேவின் முயற்சியால் 17 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு, இன்று 16,000 மரங்களுடன் அந்த மலைப்பகுதியே பசுமையாகக் காட்சியளிக்கிறது.

மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக, அவற்றை வேரோடு மாற்று இடத்தில் நடும் (Transplantation) தொழில்நுட்பம் மூலம் 200-க்கும் மேற்பட்ட பழமையான ஆலமரங்களை இவர் மறுவாழ்வு செய்துள்ளார். இதுபோல் 6.5 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

‘‘இலவசமாக ஆக்சிஜனை சுவாசிக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது வயதிற்கு இணையான எண்ணிக்கையில் மரங்களை நட்டு இயற்கைக்கு அதை திருப்பிக் கொடுக்க வேண்டும்’’ என்று கூறும் சாயாஜி ஷிண்டே, அரசு தனக்கு தானமாக வழங்கிய நிலத்தை, தற்போது கிராமங்களுக்கு இலவசமாக மரங்களை வழங்கும் ஒரு மிகப்பெரிய நர்சரியாக மாற்றத் திட்டமிட்டுள்ளார்.

Tags : Sayaji Shinde ,Mumbai ,Maharashtra ,Satara district ,
× RELATED கணவர் முன்பே சமந்தாவுக்கு ரசிகர் புரபோஸ்