×

நடிகை அர்ச்சனா பூரன் சிங் மகனிடம் ரூ.87,000 அபேஸ்: மோசடி கும்பலின் ரெகுலர் கஸ்டமர் என்று கிண்டல்

மும்பை: பிரபல நடிகை அர்ச்சனா பூரன் சிங்கின் மகன் ஆன்லைன் மோசடியில் ரூ.87,000 இழந்த சம்பவம் நகைச்சுவையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகை அர்ச்சனா பூரன் சிங்கின் (63) இளைய மகன் ஆயுஷ்மான் சேத்தி, கடந்த 2025ம் ஆண்டு ஜூலை மாதம் தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்றபோது, ஸ்கை டைவிங் செய்ய போலி இணையதளம் மூலம் முன்பதிவு செய்து ஏமாற்றப்பட்டார்.

அதற்கு முன்னதாக பிளே ஸ்டேஷன் கணக்கு மூலம் ரூ.80 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த நிலையில், நேற்று அவருடைய அண்ணன் ஆர்யமான் வெளியிட்ட யூடியூப் வீடியோவில், ஆயுஷ்மான் சேத்தி மீண்டும் ஒரு புதிய மோசடியில் சிக்கியது தெரியவந்துள்ளது. ஒரு பயனுள்ள இணையதளத்தில், ‘ஏழு நாட்கள் இலவச டிரையல்’ என்ற விளம்பரத்தை நம்பி ஆயுஷ்மான் சேத்தி வங்கி கார்டு விபரங்களை அளித்துள்ளார்.

அப்போது ‘0’ ரூபாய் பரிவர்த்தனைக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது கணக்கில் இருந்து ரூ.87 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை திரும்ப பெற அவர் முயற்சி செய்த போது, வாடிக்கையாளர் சேவை மையத்தில், ஒரு மனிதருக்கு பதிலாக ‘செயற்கை நுண்ணறிவு’ மட்டுமே பதில் அளித்த காரணத்தால் அவர் பெரிதும் விரக்தி அடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தை கேட்டு அவரது தந்தை பர்மீத் சேத்தி, தாய் அர்ச்சனா பூரன் சிங் ஆகியோர் ஆயுஷ்மானை கிண்டல் செய்துள்ளனர். ‘மோசடி செய்பவர்களுக்கு ஆயுஷ்மான் ஒரு ‘ரெகுலர் கஸ்டமர்’ ஆகிவிட்டார்’ என்று அவர்கள் வேடிக்கையாக குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும், ‘இது உன்னுடைய பணம். இதற்காக அப்பாவிடமோ அல்லது அம்மாவிடமோ நீ ரீபண்ட் கேட்கக்கூடாது’ என்று அர்ச்சனா பூரன் சிங் கறாராக தெரிவித்துள்ளார்.

Tags : Archana Pooran Singh ,Mumbai ,AYUSHMAN SETHI ,DUBAI ,
× RELATED யூடியூபில் கேடி படத்தின் டிரைலர்...