சென்னை: பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் பார்வதி, தற்போது அஜித் பால் இயக்கத்தில் ‘ஸ்ட்ரோம்’ என்ற வெப்தொடரில் நடித்துள்ளார். விரைவில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இது வெளியாகிறது. இந்நிலையில் பார்வதி அளித்துள்ள ஒரு பேட்டி வைரலாகி வருகிறது. அவர் கூறியதாவது: நாம் உருவாக்கும் படங்களில், ‘பெண்களை மையப்படுத்திய படங்கள்’ என்று அதை தனிமைப்படுத்த வேண்டாம்.
அதுதான் என் கனவு. இறுதியாக அந்த நிலையை நாம் அடைய வேண்டும். 9 வருடங்களுக்கு முன்பு ஒரு விவாதத்தில் எனக்கும், ஒரு பெண்ணியவாதி நண்பருக்கும் இடையே `வுமன் ஓரியண்டெட்’ படம் வேண்டுமா, வேண்டாமா என்று கடுமையான வாக்குவாதம் நடந்தது. அப்படி சொல்வது மிகவும் அவசியம் என்று அவர் சொன்னார். அதற்கு நான், `எல்லா கதைகளும் மனிதர்களை மையப்படுத்திய கதைகள் என்றுதான் சொல்லப்பட வேண்டும்’ என்றேன்.
அதில் பாலின அடையாளங்கள் இருக்கவே கூடாது. இது பெண்களின் கதைகள், மனிதர்களின் கதைகள் என்று பார்க்கப்படுவது இல்லை. அது சில காரணங்களுக்காக `அது பொண்ணுங்கள பத்தின படம். நம்ம கதை இல்லை’ என்றுதான் பார்க்கப்படுகிறது. ஆண்களின் கதைகளை எப்படி பெண்களால் புரிந்துகொள்ள முடிகிறதோ, அதுபோல் பெண்களின் கதைகளை ஆண்களாலும் புரிந்துகொள்ள முடியும். பாலின பேதம்தான் நம்மை பிரித்துவிடுகிறது.
