ஐதராபாத்: தமிழில் ‘களரி’, ‘ஜூலை காற்றில்’ ஆகிய படங்களில் நடித்த மலையாள நடிகை சம்யுக்தா மேனனுக்கு தொடர்ந்து இங்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தெலுங்கு படவுலகை நோக்கி சென்றார். அங்குள்ள சில இளம் ஹீரோக்களின் சிபாரிசு காரணமாக நிறைய வெற்றிப் படங்களில் நடித்த அவர், தனுஷுடன் நடித்திருந்த ‘வாத்தி’ என்ற படத்துக்கு பிறகு தமிழில் ராகவா லாரன்ஸுடன் ‘பென்ஸ்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
தவிர, தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ மற்றும் ‘பிளாக் கோல்ட்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், திடீரென்று ஒரு இளைஞரை சம்யுக்தா மேனன் காதலிப்பதாகவும், விரைவில் அவரையே ரகசிய திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து சம்யுக்தா மேனன் கூறுகையில், ‘தினமும் சோஷியல் மீடியா மூலம் வதந்தி பரப்பி வருவதையே முழுநேர தொழிலாக வைத்திருக்கும் பலர், நடிகைகளை பற்றி அவதூறு செய்திகளை பரப்புவதால், அதை மக்களும், ரசிகர்களும் உண்மை என்று நினைக்கின்றனர். எனது முழு நேரத்தையும் நடிப்பதற்காக மட்டுமே செலவு செய்து வருகிறேன். இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை.
ரகசிய திருமணம் செய்துகொள்ளவும் திட்டமிடவேஇல்லை. திரையுலகில் எனது வளர்ச்சியை தடுக்கும் வகையில், இதுபோன்ற சில அவதூறு செய்திகள் பரப்புவதை சம்பந்தப்பட்ட சிலர் உடனே நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார். சமீபத்தில் இதுபோன்ற வதந்தியில் சிக்கிய பிரியங்கா மோகன், திட்டமிட்டே ஒருவர் தனது திரையுலக வளர்ச்சியை தடுத்து வருகிறார் என்று பகிரங்கமாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
