பெங்களூரு: கடந்த 2025ம் ஆண்டு கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், ‘காந்தாரா’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து நடிகர் ரன்வீர் சிங் பேசினார். அப்போது கடலோர கர்நாடக மக்களின் புனித தெய்வமான சாவுண்டி தெய்வத்தை ‘பெண் பேய்’ என்றும் ‘அரக்கன்’ என்றும் அவர் விமர்சித்தார். மேலும் அந்த தெய்வத்தின் ஆட்டத்தை மேடையில் கிண்டலாக செய்து காட்டினார். இதனால் மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி ரன்வீர் சிங் தாக்கல் செய்த மனு, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், ‘ரன்வீர் செய்தது சரியல்ல. ஒரு சினிமா சூப்பர் ஸ்டார் என்பவர் சட்டத்திற்கு மேலானவர் கிடையாது. மக்களின் உணர்வுகளைப் புண்படுத்த உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ என்று கடுமையாக எச்சரித்தார். சமூக வலைதளத்தில் ரன்வீர் சிங் தரப்பு வெளியிட்ட வருத்தம் வெறும் கண்துடைப்பு என்று புகார்தாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரன்வீர் சிங் தரப்பில், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி கடிதம் தாக்கல் செய்ய சம்மதித்துள்ளார்.
