மும்பை: மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே மீதான விமர்சகருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய அமைச்சர் ரானே வீட்டை முற்றுகையிட முயன்ற சிவசேனா கட்சியினருடன் பாரதிய ஜனதா தொண்டர்கள் மோதியது மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே தொடர்ச்சியாக மராட்டிய அரசையும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மராட்டியத்தில் மக்கள் ஆசீர்வாத யாத்திரை நடத்தி வரும் அமைச்சர் நாராயண் ரானே, சமீபத்தில் ரத்தனகிரியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டினை கூட முதல்வர் உத்தவ் தாக்கரே அறியாதது வெட்கக்கேடானது என்றார். சுதந்திரதின உரையின் போது சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று உதவியாளரிடம் கேட்டு பேசியதை சுட்டிக்காட்டிய நாராயண் ரானே, தான் அங்கே இருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என்று பேசினார். மத்திய அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த சிவசேனா, அவர் மீது புனே காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிப்லன் நகரத்தில் அமைச்சர் நாராயண் ரானே தங்கியுள்ள ஹோட்டலில் அவரிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இதனிடையே நாசிக்கில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தை முற்றுகையிட்ட சிவசேனா அமைப்பினர் சரமாரியாக கற்களை வீசி தாக்கினர். இந்நிலையில் மும்பையில் உள்ள ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானேவின் இல்லத்தை சிவசேனா தொண்டர்கள் முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர். அப்போது பாரதிய ஜனதா தொண்டர்கள் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சர்ச்சைக்குள்ளான ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே, தனது அரசியல் வாழ்க்கையினை சிவசேனா கட்சியில் இருந்து தொடங்கியவராவார். 1990ம் ஆண்டு சிவசேனா கட்சி சார்பில் போட்டியிட்டு மராட்டிய சட்டமன்றத்திற்கு தேர்வானவர். 2005ம் ஆண்டு சிவசேனாவின் இருந்து விலகிய ரானே, காங்கிரசில் இணைந்து மாநில அமைச்சரானார். பின்னர் காங்கிரசில் இருந்து 2017ல் விலகி புதிய கட்சியை தொடங்கினார். மராட்டிய தேர்தலின் போது தனது கட்சியை பாரதிய ஜனதாவுடன் இணைத்த ரானே தற்போது, மோடி அரசில் ஒன்றிய அமைச்சராக பதவி வகித்து வருகிறார். …
The post முதல்வர் உத்தவ் தாக்கரே மீதான விமர்சனத்திற்கு எதிர்ப்பு!: மும்பையில் ஒன்றிய அமைச்சர் ரானே வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜக -சிவசேனா தொண்டர்கள் இடையே மோதல்..!! appeared first on Dinakaran.