கொரோனா 3ஆம் அலை எதிர்கொள்ள அரசு மருத்துவமனையில் ஓவியங்களுடன் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு: மருத்துவமனை டீன் தகவல்

செங்கல்பட்டு: கொரோனா 3ம் அலையை எதிர்க் கொள்ள, குழந்தைகளுக்கு ஓவியங்களுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை டீன் முத்துகுமார் கூறினார். முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், தமிழகத்தில், கொரோனா தொற்றின் 2வது அலை படிப்படியாக குறைந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக தொற்று அதிகரித்தது. மருத்துவ வல்லுனர்கள் அறிவித்தபடி, கொரோனா 3வது அலை தொடங்கியதாக மக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், 3வது அலை வரும் பட்சத்தில், குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.இதையொட்டி, அரசு மருத்துவமனைகளில்  குழந்தைகளுக்கு கூடுதலாக சிறப்பு வார்டுகள் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவில் 200க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளுடன் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு, குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 25 ஐசியூ படுக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் மனதை கவரும் வகையில் அவர்களுக்கு பிடித்தது போன்று சுவர்களில் வண்ண ஓவியங்கள், பொம்மைகள், கார்ட்டூன் படங்கள் வரையப்பட்டுள்ளன.குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கடந்த ஒரு வாரமாக குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மன உளைச்சல் மற்றும் வலியுடன் வரும் குழந்தைகளின் மனநிலையை மாற்றவும், அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், குதூகலமாக குழந்தைகள் இருக்கவும், இந்த வார்டு முழுவதும் டோரா, புஜ்ஜி, குரங்கு உள்பட பல விதமான கார்ட்டூன் ஓவியங்கள் வார்டுகளின் அனைத்து இடங்களிலும் வரையப்பட்டுள்ளன. இதுகுறித்து, செங்கல்பட்டு மருத்துவமனை டீன் முத்துகுமார் கூறுகையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தற்போது நாள் ஒன்றுக்கு 70 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர். 3வது அலை குழந்தைகளை தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க தனி சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் நிபுணர்களுக்கு கொரோனா 3ம் அலை சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 9 தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது எந்த நேரத்திலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால், உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் சத்யா, முத்துகுமரன், ரவிக்குமார் உள்ளிட்ட சீனியர் டாக்டர்கள் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்ட 50 டாக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றார்….

The post கொரோனா 3ஆம் அலை எதிர்கொள்ள அரசு மருத்துவமனையில் ஓவியங்களுடன் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு: மருத்துவமனை டீன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: