சென்னை: தந்த்ரா பிலிம்ஸ் ஜே.கே.சரவணா தயாரிப்பில், சுவாமி ஐயப்பனின் மகிமைகளை சொல்லும் இரண்டு பிரமாண்ட படங்களின் தலைப்புகளை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். முன்னதாக ‘சென்னை 600028’, ‘சென்னை 600028’ 2வது பாகம் ஆகிய படங்களின் இணை தயாரிப்பாளராக இருந்த ஜே.கே.சரவணா, தற்போது ‘தத் த்வம் அஸி’, ‘ஆர்ய கேரள வர்மன்’ ஆகிய படங்களை தனியாக தயாரிக்கிறார். ‘தத் த்வம் அஸி’ (அதுவாகவே நீ இருக்கிறாய்) என்ற படம், சமகாலத்தில் நடக்கும் ஆன்மீகம் கலந்த ஆக்ஷன் கதையுடன் உருவாகிறது. சுவாமி ஐயப்பனின் தீவிர பக்தரின் வாழ்க்கை, நம்பிக்கை, பக்தி, ஆன்மீக பயணத்தை மையப்படுத்தி படம் உருவாக்கப்படுகிறது.
இதை 100 கோடி ரூபாய் வசூலித்த சூப்பர் ஹிட் படமான ‘மாளிகப்புரம்’ என்ற படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்குகிறார். ‘ஆர்ய கேரள வர்மன்’ என்ற படம், இதுவரை அதிகமாக அறியப்படாத சுவாமி ஐயப்பனின் சுயசரிதையாக உருவாக்கப்படுகிறது. 16ம் நூற்றாண்டின் வரலாற்று பின்னணியில் அவரது வீரத்தையும், ஆன்மீக தத்துவத்தையும் மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை ஜே.கேசரவணா, ஆதித்யா தங்கிராலா இணைந்து இயக்குகின்றனர். ஆன்மீகம், வீரம், பண்பாடு ஆகியவை இணையும் சக்தி வாய்ந்த காட்சி படைப்பாக இது உருவாகிறது. இரு படங்களுக்கும் பிரேம்ஜி இசையமைக்கிறார்.
