×

ரூ.10 கோடி கேட்டு ஹிமான்ஷி குரானாவுக்கு கொலை மிரட்டல்: நடிகைக்கு போலீஸ் பாதுகாப்பு

மொகாலி: மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், கடந்த 2024 அக்டோபர் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் மூளையாக செயல்பட்டவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த ஜீஷன் அக்தர் (32). லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த அவர், கொலைக்கு தேவையான துப்பாக்கிகளை வழங்கியதோடு, நிதி விவகாரங்களையும் கவனித்து வந்ததாக போலீசார் குற்றம் சாட்டினர். பாபா சித்திக்கின் கொலைக்கு பிறகு இந்தியாவில் இருந்து தப்பித்து சென்ற ஜீஷன் அக்தர், கடந்த 2025 ஜூன் மாதம் போலி கடவுச்சீட்டு விவகாரத்தில் கனடாவில் பிடிபட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் பணி தற்போது வரை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் பஞ்சாபி நடிகையும், டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவருமான ஹிமான்ஷி குரானாவுக்கு மின்னஞ்சல் மற்றும் ஒலிப்பதிவு மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதில், ‘ஜீஷன் அக்தர் குழுவில் இருந்து பேசுகிறோம், உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது’ என்று குறிப்பிட்டு, 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஹிமான்ஷி குரானா மொகாலி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் பல்வேறு பிரிவுகளில் ஜீஷன் அக்தர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது நடிகையின் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் பெயரை பயன்படுத்தி ஜீஷன் அக்தர் தனிப்பட்ட முறையில் இந்த மிரட்டல்களை விடுத்து வருவதாக சந்தேகிக்கும் போலீசார், இதுகுறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Himanshi Khurana ,Former ,Maharashtra ,minister ,Baba Siddique ,Zeeshan Akhtar ,Jalandhar, Punjab ,Lawrence Bishnoi ,India ,
× RELATED மீண்டும் கீது இயக்கத்தில் கியாரா