மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் நடித்து, கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வந்து தோல்வி அடைந்த பான் இந்தியா படம், ‘தி ராஜா சாப்’. இப்படத்தில் பிரபாஸின் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது. இத்தகவலை படக்குழு நிராகரித்தது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் படம் வெளியானது. மீண்டும் இப்படம் கேலி செய்யப்பட்டது. இதிலுள்ள பல்வேறு காட்சிகளில் பிரபாஸுக்கு பதிலாக ‘டூப்’பை நடிக்க வைத்து, சிஜியில் முகத்தை மாற்றியதாக சர்ச்சை எழுந்தது. அதில் சண்டை காட்சியில் நடித்த மாளவிகா மோகனனும் ‘டூப்’ வைத்து சண்டை செய்துவிட்டு, அவரே செய்ததாக சொல்கிறார் என்ற தகவல் பரவியது.
இதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், ‘நான் ஒரிஜினலாக ஸ்டண்ட் செய்யவில்லை என்றும், ‘டூப்’ வைத்து நடித்ததாகவும், இதில் எனக்கு இரட்டையராக இருந்த ஸ்டண்ட் கலைஞரின் போட்டோ இணையத்தில் பரவி வருவதையும் பல்வேறு பதிவுகளில் பார்த்தேன். முதலாவதாக, நான் ஆக்ஷன் காட்சியில் நடிப்பதை பெரிதும் ரசிக்கிறேன். சிறுவயதில் இருந்தே உடல்ரீதியான சவாலை சந்திப்பதிலும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டிரு்க்கிறேன். இரண்டாவதாக, படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் தங்கள் சொந்த ஸ்டண்ட்களை செய்தாலும் கூட, ஸ்டண்ட் டபுள் என்ற ‘டூப்’ கலைஞர்கள் படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். அந்த சண்டை காட்சியில் நடிப்பது ஹீரோவுக்கு மிகவும் ஆபத்தானது என்று நினைக்கும்போது, உடனே அந்த கலைஞர்கள் உதவுவார்கள். இப்படத்தில் நான் நடித்த சில சண்டை காட்சிகள் உருவான விதத்தின் வீடியோவை பகிர்கிறேன். அவற்றை எப்படி சரியாக செய்வது என்று எனக்கு கற்றுக்கொடுத்த எனது ஸ்டண்ட் டபுளுக்கு மனமார்ந்த நன்றி’ என்றார்.
