சென்னை: தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மகேந்திரன். தனது சிறு வயதிலேயே திரையுலகின் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து, மாஸ்டர் மகேந்திரன் என்று அழைக்கப்பட்டார். குழந்தை நட்சத்திரமாக இருந்து நாயகனாக உருவெடுத்த மகேந்திரன், கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நீலகண்டா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகி இருக்கிறது. நீலகண்டா திரைப்படத்தை எம்.ஸ்ரீனிவாசுலு மற்றும் டி.வேணுகோபால் சார்பில் எல்.எஸ். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ராகேஷ் மாதவன் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனில் இனமடுகு நிர்வாக தயாரிப்பும், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை ஸ்ரவன் ஜி குமார் மேற்கொண்டுள்ளார். மார்க் பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் மகேந்திரன், யாஷ்னா முத்துலுரி, நேஹா பதன், ஸ்னேஹுலால், ராம்கி, பப்ளு ப்ரித்விராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் கர்மா மீது அதீத நம்பிக்கை கொண்ட சாதாரண தையல்காரனின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னை மற்றும் அவனது வாழ்க்கையை புரட்டி போடும் எதிரியை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பது கதை.

