அசோக் குமார், ஆஷ்னா சவேரி தம்பதிக்கு இடையே கடுமையான மோதல் ஏற்படும் நிலையில், ஆஷ்னா சவேரியை தனி வீட்டில் அடைத்து வைக்கிறார் அசோக் குமார். அவருக்கு செக்யூரிட்டி வினோத் சாகர் உளவு சொல்கிறார். வெளியேற முடியாமல் தவிக்கும் ஆஷ்னா சவேரி தற்கொலைக்கு முயற்சிக்க, வீட்டில் திருட வந்த முனீஷ்காந்த் வசமாக சிக்குகிறார். அவரிடம் துப்பாக்கியை கொடுத்து, தன்னை கொல்லும்படி ஆஷ்னா சவேரி சொல்ல, முனீஷ்காந்த் என்ன செய்கிறார்? ஆஷ்னா சவேரிக்கு என்ன பிரச்னை? அசோக் குமார் ஏன் அப்படி செய்தார் என்பது மீதி கதை.
கணவரின் சித்ரவதையால் பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் ஆஷ்னா சவேரி, சில காட்சிகளில் நடிப்பில் உருக வைக்கிறார். திடீரென்று அசோக் குமாரை துப்பாக்கியால் சுடும்படி சொல்லி, வில்லியாக மாறி அதிர வைத்திருக்கிறார். அசோக் குமார், முனீஷ்காந்த் இயல்பாக நடித்துள்ளனர். நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, வினோத் சாகர், ஆர்.எஸ்.நித்திஷ் நன்கு நடித்துள்ளனர்.
ஒரே வீட்டுக்குள் பல்வேறு கோணங்களில் ஆர்.அதிசயராஜின் கேமரா அசத்தியுள்ளது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் என்டிஆர் கவனத்தை ஈர்த்துள்ளார். பி.ராஜசேகரன் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இந்த உலகில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. சூழ்நிலைதான் ஒவ்வொருவரையும் தீர்மானிக் கிறது என்று இயக்குனர் கார்த்தி தட்சிணாமூர்த்தி சொல்கிறார். பட உருவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
