சென்னை: மதன் இயக்கத்தில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ‘வித் லவ்’ என்ற படம், வரும் 6ம் தேதி வருகிறது. இதுபற்றி அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது: முதலில் இந்த படத்தில் நடிக்க ஓ.கே சொன்னேன். பிறகு வந்த விமர்சனங்கள் கடுமையாக பாதித்தது. பிறகு ரஜினிகாந்த் சாரை சந்தித்தபோது, ‘நீ நடி கண்ணா’ என்று உற்சாகப்படுத்தினார்.
அந்த வார்த்தை எனது இன்செக்யூரிட்டியை உடைத்தது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் ரிலீசுக்கு முன்பே ‘வித் லவ்’ படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று மதன் கேட்டார். அவர் என்மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் ரிலீசான பிறகே எனக்கான மரியாதை கிடைத்தது. அதுபோல் பல மடங்கு மரியாதை மதனுக்கு கிடைக்கும். என்னை பொறாமைப்பட வைப்பது போன்ற பல காட்சிகள், இப்படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கிறது.
இதற்கு முன்பு நான் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வேன். இப்போது அதே மெட்ரோ ரெயில் பெட்டிகளில் எனது முகம் விளம்பரங்களில் இருக்கிறது. நான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கி பிரபலமானதைவிட, அகிலாவின் புருஷனாகி ஃபேமஸ் ஆனதுதான் அதிகம். நான் என்ன தவறு செய்தாலும், அது நான் செய்த சில பாவங்களின் பிரதிபலிப்புதான். எனக்கு என்ன நல்லது நடந்தாலும், அதற்கு ஒரே காரணம் எனது காதல் மனைவி அகிலாதான்.
