சில வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள அரவிந்த்சாமி, தற்போது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள முழுநீள மவுன படமான ‘காந்தி டாக்ஸ்’ என்ற பான் இந்தியா படத்துக்கு சில கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. முன்னதாக அரவிந்த்சாமி, 2005ல் நடந்த ஒரு விபத்தில் சிக்கினார். அதில் அவரது கால்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இதனால், சில வருடங்கள் வரை கட்டாய ஓய்வெடுத்து வந்த அவர், சமீபத்தில் மெல்போர்ன் திரைப்பட திருவிழாவில் கலந்துகொண்டு பேசும்போது இத்தகவலை தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடைசி வாய்ப்பாக எனது காலில் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும், அதற்கு பிறகு என்னால் நன்கு நடக்க முடியும் என்ற நிலையில், எனக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், அதற்கு சில நாட்களுக்கு முன்பு கேரளாவை சேர்ந்த ஒரு ஆயுர்வேத வைத்தியரை சந்தித்தேன். அப்போது முதல் எனக்கு ஆயுர்வேத சிகிச்சையின் மீது அதிக நம்பிக்கை ஏற்பட்டது. மூன்றே நாட்களில் அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக நான் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். அந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நேரத்தில்தான், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில், ‘கடல்’ என்ற படத்தில் நடித்தேன். அதற்கு முன்பு 13 வருடங்களாக சினிமாவில் நடிக்க மனதளவில் நான் தயாராகவில்லை. காரணம், திடீரென்று எனது உடல் எடை அதிகரித்து, தலைமுடியும் உதிர்ந்துவிட்டது’ என்றார். காலம் கடந்த இத்தகவல், அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
