திருவண்ணாமலையை தலைநகராக ஏற்று ஆட்சி செய்த 3ம் வீரவல்லாள மகாராஜாவின் (நட்டி நடராஜ்) மேற்பார்வையில், விழுப்புரம் அருகிலுள்ள சேந்தமங்கலத்தை ஆட்சி செய்யும் குறுநில மன்னரின் வாரிசு வீரசிம்ம காடவராயர் (ரிஷி ரிச்சர்ட்), வீரவல்லாள மகாராஜாவின் கருட படையில் இணைகிறார். வட இந்தியாவை தொடர்ந்து தென்னிந்தியாவை கைப்பற்ற துருக்கியர்கள் வரும்போது என்ன நடக்கிறது என்பதை வரலாற்று சம்பவங்களுடன் சில புனைவுகளை சேர்த்து படம் சொல்கிறது.
14ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த வீரவல்லாள மகாராஜா, துருக்கியரின் படைகளை எதிர்த்து போரிட்ட காடவராயர்கள் பற்றிய சர்ச்சைக்குரிய சில சம்பவங்களை சினிமா பாணியில் இயக்குனர் மோகன்.ஜி சொல்கிறார். வீரசிம்ம காடவராயராக ரிச்சர்ட் ரிஷி, திரெளபதி தேவியாக ரக்ஷணா இந்துசூடன், வீரவல்லாள மகராஜாவாக நட்டி நட்ராஜ் ஆகியோர் அந்தந்த கேரக்டருக்கு உயிரூட்டியுள்ளனர்.
ஆனால், நட்டி நடராஜின் வயதான கெட்டப் பொருந்தவில்லை. முகமது பின் துக்ளக்காக சிராக் ஜானி, ஜியாசுதீன் தம்கானியாக தினேஷ் லம்பா மற்றும் தேவியானி சர்மா, வேல.ராமூர்த்தி, ‘நாடோடிகள்’ பரணி, திவி, அருணோதயம் லட்சுமணன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா ஆகியோர், படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர். சிலர் வசனங்களை ஒப்பித்திருப்பது நெருடுகிறது.
கதை நடக்கும் காலக்கட்டத்துக்கு ஒளிப்பதிவாளர் பிலிப் ஆர்.சுந்தரும், ஆர்ட் டைரக்டர் எஸ்.கமலநாதனும் அழைத்துச் சென்றுள்ளனர். காட்சிகளின் நீளத்தை எடிட்டர் எஸ்.தேவராஜ் குறைத்திருக்கலாம். ஜிப்ரான் வைபோதா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். முகலாயர்களை பெண்பித்தர்களாக காட்டுவது நெருடுகிறது. குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படத்தை கொடுக்க முயற்சித்துள்ள மோகன்.ஜி, காட்சிகளின் வீரியத்தை இன்னும் அழுத்தமாக ரசிகர்களுக்கு கடத்தி இருக்கலாம்.
