மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் யுவன் கிருஷ்ணா, தனது காளி என்ற கிடாவை, கிடா முட்டு போட்டியில் பங்கேற்க வைக்கிறார். தொடர்ந்து வெற்றிபெற்று மெடல் வாங்கும் ரிதான் கிருஷ்ணாஸின் கிடாவுடன் காளி மோதி ஜெயிக்கிறது. இதை ஏற்க முடியாத ரிதான் கிருஷ்ணாஸ், தொடர்ந்து சூழ்ச்சி வலை பின்னி யுவன் கிருஷ்ணாவுக்கு தொல்லை கொடுத்து, காளியை வெட்ட முயற்சிக்கிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
முழுநீள கிடா முட்டு சண்டை படத்துக்காக 3 வருடங்கள் கடுமையாக உழைத்து, அதை திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குனர் பிரகபல்லை பாராட்டலாம். விறுவிறுப்பு குறையாமல் கமர்ஷியலாக இயக்கியுள்ளார். காளிக்கு பயிற்சி அளித்து, அதை உயிராக மதிக்கும் யுவன் கிருஷ்ணாவின் நடிப்பு அபாரம். அவருக்கு ஈடுகொடுத்து ரிதான் கிருஷ்ணாஸ் முரட்டு வில்லனாக கொடிகட்டி பறக்கிறார்.
யுவன் கிருஷ்ணாவின் காதலியாக அம்மு அபிராமி, அக்காவாக சரண்யா ரவிச்சந்திரன், சமாதான தூதுவராக மதுசூதன ராவ், காளியை உயிர்ப்பிக்கும் வெள்ளந்தி மனிதராக சித்தன் மோகன் உள்பட, படத்தில் நடித்துள்ள அனைவரும் கவனத்தை ஈர்க்கின்றனர். நன்கு பயிற்சி பெற்ற திடகாத்திரமான கிடாக்கள்தான் ஹீரோக்கள். அவற்றுக்கும் விருது கொடுக்கலாம். சக்தி பாலாஜியின் பின்னணி இசை, காட்சிகளின் விறுவிறுப்புக்கு பேருதவி செய்துள்ளது.
பாடல்கள் ஸ்பீடு பிரேக்கர். என்.எஸ்.உதயகுமார் கேமரா, கிடா முட்டு சண்டையை அசலாக படமாக்கியுள்ளது. பிரகபல், சூர்யா பாண்டியன், சூர்யா பாலா ஆகியோரின் வசனங்கள், என்.பி.ஸ்ரீகாந்த் எடிட்டிங், பிரபு ஜாக்கியின் ஸ்டண்ட் குறிப்பிடத்தக்கவை. பாரம்பரிய கலாச்சார விளையாட்டான கிடா முட்டு சண்டையை நம்பகத்தன்மையுடன் இயக்கியுள்ள பிரகபல், படத்தின் நீளத்தையும், சில காட்சிகளின் முடிவையும் கவனித்து குறைத்திருக்கலாம்.
