நடிகைகளை தாக்கிய மாளவிகா மோகனன்

சமீபத்தில் மாளவிகா மோகனன் அளித்த பேட்டியில், ‘எந்த மொழியில் உங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதில் நடிப்பதே சிறந்தது. நான் மலையாளம் பேசுவேன். மோகன்லாலுடன் நடித்திருந்த ‘ஹிருதயபூர்வம்’ படத்தில் புனேயில் பிறந்து வளர்ந்த மலையாளி கேரக்டர் கிடைத்தது. அதற்கேற்ப நகரத்து மலையாளத்தில் பேசியிருந்தேன். தெலுங்கில் நடிக்கும்போது அவ்வளவு வசதி இருக்காது. சிலர் வசனத்தை மாற்றும்போது, என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பேன். எனவே, உங்களுக்கு தெரிந்த மொழியில் நடிப்பதுதான் சிறந்தது. அந்தந்த கலாச்சாரங்கள் நமக்கு தெரிந்திருப்பதும் கூடுதலாக உதவும். அதுவே பிற மொழிகளில் அப்படி நடக்காது. இதில் பிரச்னை எங்கு வருகிறது என்றால், சில இயக்குனர்கள் கடைசி நேரத்தில் வசனங்களை எழுதுவார்கள்.

பெரும்பாலான நேரங்களில் எனக்கு அப்படித்தான் நடந்திருக்கிறது. நீளமான வசனங்களை என்னால் பிற மொழிகளில் உடனே கற்றுக்கொண்டு பேச முடியாது. மலையாளம் போலவே தமிழ் இருப்பதால் சுலபமாக இருக்கும். மற்ற மொழிப் படங்களில் என்னால் அப்படி இயங்க முடியவில்லை. படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பே வசனங்கள் முழுவதையும் மனப்பாடம் செய்ய நினைப்பேன். படப்பிடிப்பு தொடங்க சில நிமிடங்களுக்கு முன்பு வசனத்தை மாற்றும்போது, கேரக்டரின் உணர்வு, காட்சியின் தன்மை போன்றவற்றை மறந்து, இதை பேசி முடித்த பிறகு என்ன பேச வேண்டும் என்ற எண்ணமே மனதில் ேதான்றும். அப்போது நான் மோசமாக நடிப்பேன். இதுபோன்ற நெருக்கடிகளை சில நடிகைகள் சுலபமாக சமாளிக்கின்றனர்.

தெலுங்கு மற்றும் தமிழிலுள்ள சில நடிகைகள் வசனங்களை பார்க்க மாட்டார்கள். சோகமான காட்சிக்கான முகபாவனையுடன் 1,2,3,4 என்று சொல்வார்கள். கோபமான காட்சிக்கான முகபாவனையுடன் A,B,C,D என்று சொல்வார்கள். அதை டப்பிங் பேச வசதியாகவும் பேசுவார்கள். இப்படியே தங்கள் திரையுலக பயணத்தை சமாளித்து கடந்துவிடுகிறார்கள்’ என்றார்.

Related Stories: