மாயபிம்பம் விமர்சனம்…

கடலூரில் மருத்துவம் படிக்கும் ஆகாஷ் பிரபு, நர்சாக பணியாற்றும் ஜானகியை காதலிக்கிறார். ஜானகியின் அம்மா வேறுமாதிரி என்பதால், மகளும் அப்படித்தான் இருப்பார் என்று நண்பர் சொல்கிறார். அதை நம்பிய ஆகாஷ் பிரபு, ஜானகியை தவறான நோக்கத்தில் நெருங்க, அவரை உதறி தள்ளிவிட்டு ஜானகி ஓடுகிறார். இந்த விஷயம் ஆகாஷ் பிரபுவின் குடும்பத்துக்கு தெரிந்து பிரச்னை ஏற்படுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது எதிர்பாராத கிளைமாக்ஸ்.

பார்த்தவுடனே இதயத்தில் இடம்பிடிக்கும் சுமதி கேரக்டரில் ஜானகி வாழ்ந்திருக்கிறார். ஆழமான கண்களும், தெற்றுப்பல்லும், இயல்பான நடிப்பும் அசத்தியுள்ளது. இறுதியில் நெகிழவைக்கிறார். ஆகாஷ் பிரபு ஆர்ப்பாட்டமின்றி நடித்து, கிளைமாக்ஸில் கண்கலங்க வைக்கிறார். அவரது அம்மா, அப்பா மற்றும் அண்ணன், அண்ணி, அவர்களின் மகள் பாசமழை பொழிந்துள்ளனர். ஹரி ருத்ரன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் யதார்த்தமாக நடித்துள்ளனர். அனைவரும் ‘இயக்குனர்களின் நடிகர்களாக’ மாறியிருப்பது சிறப்பு.

கடலூர் மற்றும் சிதம்பரத்தை கண்முன் கொண்டு வந்துள்ளது, எட்வின் சகாய் கேமரா. நந்தா பின்னணி இசை கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. எடிட்டர் வினோத் சிவகுமார் பணி குறிப்பிடத்தக்கது. எழுதி இயக்கி தயாரித்துள்ள கே.ஜே.சுரேந்தர், அதிகமான அன்பு காதலை எப்படி அலைகழிக்கிறது என்பதை மாறுபட்ட கோணத்தில் சொல்லி இருக்கிறார். அவரது உழைப்பும், சிந்தனையும் காதலுக்கு புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது. படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்.

Related Stories: