கொற்கையில் அகழாய்வு பணி: 4 அடுக்கு வடிகட்டும் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு..!

தூத்துக்குடி: ஏரல் அருகே கொற்கை அகழாய்வு பணியில் 4 அடுக்குகள் கொண்ட திரவப் பொருட்கள் வடிகட்டும் சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சிவகளை, ஆதிச்சநல்லூர் பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதற்கட்ட அகழாய்வு பணியும் கடந்த பிப்.26ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கொற்கையில் நடந்து வரும் அகழாய்வில் கொற்கை ஊர் பகுதியில் 4 இடங்களில் 16 குழிகளும், மாரமங்கலத்தில் ஒரு குழியும் சேர்த்து 17 குழிகள் தோண்டப்பட்டு பணி நடந்து வருகிறது. அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையில் அகழாய்வாளர்கள் ஆசைதம்பி, காளீஸ்வரன் மற்றும் ஆய்வு மாணவர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 4 மாதங்களாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் ஏற்கனவே 2 ஆயிரம் ஆண்டுகள் மிக பழமையான செங்கல் கட்டுமான அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செங்கல் கட்டுமானம் 7 அடுக்கு வரிசை கொண்டதாகவும், செங்கலின் அளவு 37 செ.மீ நீளமும், 21 செ.மீ அகலமும், 7 செ.மீ கனமும் இருந்தது. தற்போது இதன் அருகில் உள்ள ஒரு மற்றொரு குழியில் 4 அடுக்குகள் கொண்ட திரவப்பொருட்கள் வடிகட்டும் பெரிய சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சுடுமண் குழாய் உயரம் 27 செ.மீ, விட்டம் 27 செ.மீ மற்றும் தடிமன் 1 செ.மீ உடையதாக உள்ளது. இந்த குழாயில் திரவப் பொருட்களை வடிகட்டும் வகையில் சிறிய துளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் திரவப்பொருட்கள் வடிகட்டப்படும். தமிழகத்தில் பல இடங்களில் நடந்து வரும் தொல்லியல் ஆய்வு களத்தில் ஒரு சில இடங்களில் சிறிய பானை மற்றும் சிறிய தட்டுகளில் துளையிட்டு வடிகட்டும் பொருட்கள் சிதைந்த நிலையில் சிறிய துண்டுகளாக கிடைத்துள்ளது. ஆனால் கொற்கையில் நடந்து வரும் அகழாய்வில் தான் பெரிய அளவிலான திரவப்பொருட்கள் வடிகட்டும் சுடுமண் குழாய்கள், அதுவும் நான்கு அடுக்குகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….

The post கொற்கையில் அகழாய்வு பணி: 4 அடுக்கு வடிகட்டும் சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு..! appeared first on Dinakaran.

Related Stories: