கப்பா (மலையாளம்)

திருவனந்தபுரத்தையே ஆட்டிப்படைக்கும் தாதா, கோட்ட மது (பிருத்விராஜ்). அவருக்கு எதிர்க்களத்தில் உள்ள தாதா, லத்தீப் (திலீஷ் போத்தன்). இரு கோஷ்டிகளும் அடிக்கடி மோதிக்கொள்ளும், ரத்தம் சிந்தும், பழிக்குப்பழி வாங்கும். அண்ணனை பிருத்விராஜ் கொல்வதை நேரில் பார்க்கும் லத்தீப்பின் மகள் அன்னா பென், அந்த ரத்தக்களத்தில் இருந்து விலகி, கணவர் ஆசிஃப் அலியுடன் பெங்களூருவில் வசிக்கிறார். பணி மாறுதலாகி திருவனந்தபுரம் வரும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது. வந்த இடத்தில் அன்னா பென்னின் பெயர், போலீஸ் லிஸ்ட்டில் குண்டர்கள் பட்டியலில் இருக்கிறது என்பது கணவர் ஆசிஃப் அலிக்கு தெரியவருகிறது. அப்பட்டியலில் இருந்து அவரை நீக்க, இருதரப்புடனும் பேசுகிறார். அரசியலில் கால்பதித்து வேறு பாதைக்கு திரும்ப நினைக்கும் பிருத்விராஜ், திலீஷ் போத்தனுடனான பகையை முடிவுக்குக் கொண்டு வர நினைக்கிறார். அதற்கு மீடியேட்டராக ஆசிஃப் அலி இருக்கிறார். ஆனால், நடப்பது வேறு. அது என்ன என்பது படத்தின் ட்விஸ்ட்.

தாதாவாக நடிப்பது பிருத்விராஜூக்குப் புதிதில்லை. மடிப்புக் கலையாத வேட்டி, சட்டை மற்றும் கொலைவெறிப் பார்வை, அவ்வப்போது மனசாட்சி தட்டி எழுப்பும்போது கலங்குவது என்று, படம் முழுக்க நெகட்டிவ் ஷேடிலேயே வருகிறார். எதிர் தாதாவான திலீஷ் போத்தன் ஒரு பத்திரிகையாளர் என்பது புதிது. பிருத்விராஜின் மனைவியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளியும், ஆசிஃப் அலியின் மனைவியாக நடித்த அன்னா பென்னும் கிளைமாக்சில் வேறு முகம் காட்டி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளனர். வலுவான கதையம்சம் கொண்ட மலையாளப் படங்கள் வரும்போது, கதையே இல்லாமல் வெறும் தாதா மோதல்களைக் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார் ஷாஜி கைலாஷ். ஆக்‌ஷன் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் இப்படம் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது.

Related Stories: