சத்ரிவாலி (இந்தி)

கெமிஸ்ட்ரி படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் டியூஷன் எடுக்கும் ரகுல் பிரீத் சிங்கிற்கு, காண்டம் (ஆணுறை) தயாரிக்கும் கம்பெனியில் ‘தர பரிசோதகர்’ வேலை கிடைக்கிறது. முதலில் தயங்கும் அவர், கைநிறைய சம்பளம் என்பதால் ஒப்புக்கொள்கிறார். ஆரம்பத்தில் கிண்டல், கேலிகள் இருந்தாலும், அவரது கடின உழைப்பால் கம்பெனி முன்னேற முக்கிய நபராகிறார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங், தான் காதலித்த சுமித் வியாசை, குடை கம்பெனியில் தர பரிசோதகராக இருப்பதாகப் பொய் சொல்லி திருமணம் செய்துகொள்கிறார். ஆச்சாரமான சுமித் வியாசின் குடும்பத்துக்கு விஷயம் தெரியும்போது என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

 

காமெடி கதையின் வழியாக சமூகத்துக்கு மிகவும் தேவையான, குறிப்பாக பெண்களுக்கு அவசியம் தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார், இயக்குனர் தேஜஸ் டியோஸ்கர். அதோடு, நேர்மையான வேலைகள் எதுவாக இருந்தாலும் அதற்காக வெட்கப்படத் தேவையில்லை என்பதையும், எந்த வேலையையும் ஈடுபாட்டுடன் செய்யும்போது உயர்வு தானாக வரும் என்பதையும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். ஒரு பெண் காண்டம் பரிசோதகர். அவரது கணவரின் குடும்பம் பூஜைப் பொருட்கள் விற்கிறது. அக்குடும்பத்தின் தலைவர் பிற்போக்குச் சிந்தனை கொண்டவர். இந்த முரண்பாடுகளை வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான படத்தை அளித்திருக்கின்றனர். காண்டம் விற்பதும், உபயோகிப்பதும் வெட்கக்கேடான செயலோ, சமூகக்கேடான செயலோ அல்ல என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறது படம்.

 

ரகுல் பிரீத் சிங் இல்லாத காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு படம் முழுக்க நிறைந்திருக்கிறார். தனது நடிப்பால் தான்யா கேரக்டருக்கு உயிரூட்டியுள்ளார். அவரது காதல் கணவராக வரும் சுமித் வியாசுக்கு அதிக வாய்ப்பு இல்லை என்றாலும், ஒரு ஜென்டில்மேனாக மனசுக்குள் நுழைகிறார். காண்டம் கேட்டு வரும் ஆண்களைத் திரட்டிய மெடிக்கல் ஸ்டோர்காரர் ரகுல் பிரீத் சிங் வீட்டு முன் தர்ணா செய்வது, ரகுல் தனியாளாக மாணவர்களுக்கு செக்ஸ் கல்வி கற்றுத்தருவேன் என்று பள்ளி முன்னால் பந்தல் போட்டு அமர்வது போன்ற சில ஒட்டாத காட்சிகள் இருந்தாலும், அவசியம் பார்க்க வேண்டிய இப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ளது.

Related Stories: