கிரிக்கெட்டில் பந்தயம் கட்டி ரூ.5 லட்சம் இழந்த டைரக்டர்

திருவனந்தபுரம்: டி20 கிரிக்கெட் போட்டிக்காக பந்தயம் கட்டி வாலிபர் ஒருவரிடம் ரூ.5 லட்சத்தை இழந்தார் சினிமா இயக்குனர். நண்பர்களிடையே பந்தயம் கட்டி பணம் இழப்பது சாதாரணமாக நடப்பதுதான். மலையாளத்தில் தனது கண் அசைவால் கவனம் ஈர்த்தவர் பிரியா வாரியர். இவர் நடித்த அந்த படம் ஒரு அடார் லவ். இந்த மலையாள படத்தை இயக்கியவர் ஒமர் லுலு. இவர் அடுத்ததாக நல்ல சமயம் என்ற மலையாள படத்தை இயக்கி வருகிறார். ஒமர் லுலு, சமூக வலைத்தளத்தில் எப்போதும் துருதுருப்பாக இருப்பார். அவருக்கு பேஸ்புக், டிவிட்டரில் நிறைய பாலோயர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் டி20 கிரிக்கெட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் எந்த அணி ஜெயிக்கும் என தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒமர் லுலு கேட்டார். அதற்கு பலரும் பலவித பதில்களை அளித்தனர்.

அப்போது ஒரு வாலிபர் மட்டும், சொன்னால் என்ன தருவீர்கள் என கேட்டார். பதிலுக்கு ஒமர், பந்தயம் கட்டுகிறேன், பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என்றார். அதற்கு அந்த வாலிபர், இங்கிலாந்துதான் ஜெயிக்கும். 5 லட்சம் ரூபாய் பந்தயத்துக்கு தயாரா என கேட்க, தயார் என ஒமரும் வீராவேசமாக கூறிவிட்டார். அந்த கிரிக்கெட் ஆட்டத்தில் வாலிபர் சொன்னபடி இங்கிலாந்து ஜெயித்து சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து பந்தயத்தில் தோற்ற டைரக்டர் ஒமர் லுலு, அந்த வாலிபரை தனது வீட்டுக்கு அழைத்தார். பிறகு பேசியபடி அவருக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதற்கான வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், அதில் பணம் வழங்கியதற்கான காட்சி இடம்பெறவில்லை. நான் பணம் வழங்கினேனா, இல்லையா என்பது யாருக்கும் தெரியாது என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: