போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகையிடம் பணம் மோசடி : நண்பர் உட்பட 3 பேர் மீது வழக்கு

பெங்களூரு: போதை பொருள் விவகாரத்தில் கைதான நடிகை கொடுத்த மோசடி புகாரின் பேரில் அவரது நண்பர் உட்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கும் நடிகை சஞ்சனா கல்ராணி, கடந்த ஆண்டு (2020) போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் போதைப்பொருள்  பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் தற்போது அவர் ஜாமீனில்  வெளியே இருந்து வருகிறார். இந்நிலையில், தனது நண்பர் ராகுல் டான்ஸ் மீது நீதிமன்றத்தில் மோசடி புகார் கூறியுள்ளார். அதில், ‘கோவா மற்றும் கொழும்பில் இருக்கும் முதலீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுவதாக எனது நண்பர் ராகுல் டான்ஸ் கூறியிருந்தார்.

அவரது பேச்சை நம்பி, கடந்த மூன்று ஆண்டுகளாக பணம் முதலீடு செய்தேன். ராகுல் டான்ஸ் உட்பட மூன்று பேரின் வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினேன். ஆனால், முதலீட்டுக்கான எவ்வித வட்டியும் தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுகின்றனர். ராகுல் டான்சி உள்ளிட்டோர் எனது பணத்தை சட்டவிரோத செயல்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுகின்றனர். என்னுடைய கவுரவத்தை பாதிக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிவருகின்றனர்’ என்று தெரிவித்திருந்தார். இம்மனுவை விசாரித்த பிசிஆர் நீதிமன்றம், இவ்விவகாரம் குறித்து விசாரிக்க இந்திரா நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி விசாரித்து ராகுல் டான்ஸ் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஐபிசி 120 பி, 107, 354, 406, 420, 506 மற்றும் பிரிவு 34-ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

Related Stories: