×

கொலை மிரட்டல் விடுத்து தள்ளிவிட்ட வடிவமைப்பாளர் மீது எப்ஐஆர் போட்டு 2 மாசமாகியும் ‘நோ ஆக்‌ஷன்’: தனியாக வாழும் நடிகை போலீசுக்கு கண்டனம்

மும்பை: கொலை மிரட்டல் விடுத்த மும்பை வடிவமைப்பாளர் மீது எப்ஐஆர் போட்டு இரண்டு மாதமாகியும் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தனியாக வாழும் நடிகை அதிருப்தி தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தனது கணவருடன் ஷெட்டிலான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரியான நடிகை மீரா சோப்ரா, வடிவமைப்பாளர் ரஜிந்தர் திவான் மீது கடந்த இரு மாதங்களுக்கு முன் மும்பை போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், ‘மும்பையின் அந்தேரி பகுதியில் உள்ள எனது புதிய வீட்டை வடிவமைப்பாளர் ரஜிந்தர் திவானுக்கு ரூ.17 லட்சம் ஒப்பந்தத்தில் வாடகைக்கு விட்டிருந்தேன். அதில், அவரது அலுவல் பணிகளை மேற்கொண்டு வந்தார். ஒப்பந்த தொகையில் பாதி பணத்தை மட்டுமே முன்பணமாக என்னிடம் கொடுத்தார். பின்னர், பனாரஸில் நடந்த படப்பிடிப்புக்காக அவர் சென்றுவிட்டார். படப்பிடிப்பை முடித்துக் கொண்டு மீண்டும் அந்தேரி வந்தார்.

அவரை நேரில் சந்தித்து மீதி பணத்தை கேட்ட போது, என்னிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தையால் அவமானப்படுத்தினார். கொலை மிரட்டலும் விடுத்தார். எனது வீட்டில் இருந்து கொண்டு, என்னையே வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டார். அவரது பணியாளர்களை கொண்டு என்னை அச்சுறுத்தினார். பின்னர், அவர் அந்த வீட்டில் தங்காமல் மாயமானார். எனக்கு தரவேண்டிய தொகையையும் தரவில்லை’ என்று தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவுகள் 54, 504, 506 (2), 509, ஆகியவற்றின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், மேற்கண்ட எப்ஐஆரின்படி, ரஜிந்தர் திவான் மீது மும்பை போலீசாரால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீரா சோப்ரா குற்றம்சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘நீங்கள் வசிக்கும் இடத்தில் பெண்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அவர்களுக்கான பிரச்னையை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாப்பவர்கள் எதற்காக நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர்? தனியாக வாழும் பெண்ணை (தன்னை) பாதுகாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அந்த பதிவை மகாராஷ்டிரா முதல்வர் அலுவலகம், அமைச்சர் ஆதித்யா தாக்கரே மற்றும் எம்பி சஞ்சய் ராவத் ஆகியோருக்கு டேக் செய்துள்ளார்.

Tags : Mazazazhi ,
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்