சென்னை: மலையாளத்தில் கே.மது இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளியான படம், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’. கடந்த 1988ல் வெளியான இதில், சேதுராம அய்யர் என்ற கேரக்டரில் மம்மூட்டி நடித்தார். எஸ்.என்.சுவாமி கதை எழுதினார். 2ம் பாகம் ‘ஜாக்ரதா’ என்ற பெயரிலும், 3ம் பாகம் ‘சேதுராம அய்யர் சிபிஐ’ என்ற பெயரிலும், 4ம் பாகம் ‘நேரறியான் சிபிஐ’ என்றும், 5ம் பாகம் ‘சிபிஐ 5: தி பிரெய்ன்’ என்ற பெயரிலும் திரைக்கு வந்தது.
5 பாகங்களிலும் கே.மது, எஸ்.என்.சுவாமி, மம்மூட்டி, முகேஷ், ஜகதி குமார் இணைந்து பணியாற்றினர். இந்நிலையில், 6ம் பாகம் உருவாகும் என்று கே.மது தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘முன்பு வெளியான ’ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ படத்தின் 5 பாகங்களையும் பார்த்துவிட்டீர்களா? இனி 6வது பாகத்தை பார்க்க விரும்புகிறீர்களா? அப்படி என்றால், அதை விரைவில் எதிர்பார்க்கலாம். இதிலும் மம்மூட்டி நடிப்பார்’ என்றார். இப்படத்தை ஜோபின் டி.சாக்கோ இயக்குவார் என்று தெரிகிறது. 5 பாகங்களை இயக்கிய கே.மது, 6ம் பாகத்தை ஏன் இயக்கவில்லை என்ற காரணம் தெரியவில்லை.
