ஓ மை கடவுளே - விமர்சனம்

பள்ளிப் பருவத்தில் இருந்து அசோக் செல்வனுடன் ஒன்றாகவே இருக்கும் தோழி ரித்திகா சிங், திடுதிப்பென்று, தன்னை திருமணம் செய்வதற்கு சம்மதமா என்று கேட்கிறார். அதற்கு உடனே சம்மதிக்கிறார், அசோக் செல்வன். ஆனால், திருமணத்துக்கு பிறகு நட்பை காதலாகவும், தோழியை தனது மனைவியாகவும்  ஏற்பதில் அசோக்கிற்கு சிறிய தடுமாற்றம் ஏற்படுகிறது. பிறகு அது சின்னச் சின்ன சண்டையாக உருமாறி, ஒரேயடியாக திருமண வாழ்க்கை கசந்துவிடுகிறது. இதனால், தன்னுடன் படித்த இன்னொரு தோழி வாணி போஜன் மீது அசோக்கிற்கு ஈர்ப்பு ஏற்பட, அது ரித்திகாவுக்கு தெரிகிறது. இறுதியில் அவர்கள் வாழ்க்கை விவாகரத்தில் வந்து நிற்கிறது.

பிறகு இந்த பிரச்னை, விஜய் சேதுபதி உருவத்தில் இருக்கும் கடவுளிடம் வருகிறது. அவர் அசோக்கின் கதையை கேட்டு விட்டு, உடனடியாக அவருக்கு ரீஎன்ட்ரி டிக்கெட் கொடுக்கிறார். அதாவது, அசோக்கிடம் ரித்திகா தன்னை திருமணம் செய்துகொள்கிறாயா என்று கேட்பதில் இருந்து, அவர் மீண்டும் ஒரு வாழ்க்கை தொடங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ‘இதற்கு முன்னால் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு, உனது வாழ்க்கையை நீயே முடிவு செய்’ என்கிறார் கடவுள். இந்த ரீஎன்ட்ரி வாழ்க்கையில் அசோக், ரித்திகா, வாணி போஜன் ஆகிய மூன்று பேரின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் நடக்கிறது என்பது கிளைமாக்ஸ்.

‘டைம் மெஷின்’ என்கின்ற சயின்ஸ்ஃபிக்‌ஷன் ஏரியாவை காதல், ரொமான்ஸ், ஈகோ, கடவுள் என்ற புது ஏரியாவுக்குள் பொருத்தி, சுவாரஸ்யமாக கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து. அசோக் செல்வன் இதற்கு முன் பல படங்களில் நடித்து இருந் தாலும், இந்த படம் அவருக்கு ஒரு மைல் கல். காதல், காமெடி, ஏக்கம், பரிதவிப்பு என எல்லா ஏரியாவிலும் நிறைவாக செய்து இருக்கிறார். ரித்திகாவை தனது மனைவியாக ஏற்பதற்கு காட்டும் தயக்கம், பிறகு தோழியாக கொண்டாடும் உற்சாகம் என்று, தன் கேரக்டரை புரிந்துகொண்டு நடித்துள்ளார். இரண்டாம் பகுதி கையில் ரித்திகாவை புரிந்துகொள்கின்ற தருணங்களில், அதை அவர் வெளிப்படுத்தும் விதம் கிளாஸ்.

‘படபட’ என்று பட்டாசு போல் வெடித்து நடித்துள்ளார், ரித்திகா. முதல் பகுதியில் பயங்கரமாக வெடிக்கும் அவர், இரண்டாம் பகுதி கதையில் மத்தாப்பு போல் வண்ணங்கள்  காட்டுகிறார். அசோக் தன்னை நிஜமாகவே காதலிக்கிறாரா? இல்லையா என்று சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் தவிப்பது, அவரது நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. வாணி போஜன் அமைதியான போஜனாக வந்து, அந்த உதவி இயக்குனர் கேரக்டருக்கான தன்மை அறிந்து நடித்துள்ளார். தனது சோகங்களை எல்லாம் மெல்லிய சிரிப்பின் மூலம் அவர் வெளிப்படுத்துவது தனி அழகு.

சாராவின் காமெடியும், குணச்சித்திர நடிப்பும் கதையுடன் பொருந்துவதால் அவரை ரசிக்க முடிகிறது. கடவுளாக விஜய் சேதுபதி வழக்கமான பாணியில் நடித்து, அந்த கேரக்டரை தூக்கி பிடித்து இருக்கிறார். அவர் சம்பந்தமானகாட்சிகள் ஒரே அறையில் நடக் கிறது என்றாலும், அவர் பேசும் வசனமும், நடிப்பும் சுவாரஸ்யம் குறையாமல் வைத்திருக்கிறது. அவரது உதவியாளராக வரும் ரமேஷ் திலக், தன் பங்குக்கு கலகலக்க வைக்கிறார். லியோன் ஜேம்ஸ் பின்னணி இசை, உணர்வுகளை கடத்திச் செல்கிறது. ஆனால், பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

கடவுள் வரும் காட்சிகள், அசோக்கின் முதல் வாழ்க்கை, இரண்டாம் வாழ்க்கை, பள்ளிப்  பருவம் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வண்ணம் கொடுத்து, வலு சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா. காதலுக்கு லாஜிக் முக்கியம் இல்லை, மேஜிக்தான் முக்கியம் என்று படத்திலேயே கருத்து சொல்லிவிடுகின்றனர். முதல் பாதியில் வழக்கமான கணவன், மனைவிக்கான ஈகோ மோதல் என்பதால் அதிகமாக ஈர்க்க வில்லை. ஆனால், பிற்பகுதியில் அதற்குமாக சேர்த்து ஈர்த்து விடுகின்றனர். உண்மையான அன்பு, நட்பு மற்றும் காதல் பற்றி சொன்னவிதத்தில் இந்த கடவுள் நல்லவரே.

Related Stories: