வால்பாறை: வால்பாறை தேயிலை தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இதை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தொழிலாளர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். வால்பாறை வனப்பகுதியில் வசிக்கும் காட்டுயானைகள் வலசை பாதைகளில் செல்லும்போது எஸ்டேட் பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது. காப்புக் காடுகள் என கூறப்படும் அடர் வனப்பகுதியில் குறிப்பிட்ட தாவரங்கள் தின்னும் யானைகள், வலசை பாதைகளில் உள்ள மித வனப்பகுதியில் கிடைக்கும் மாற்று வகை தாவரங்களை உட்கொள்கிறது. இதனால் உடலில் உள்ள நச்சுத்தன்மை குறையும் என கூறப்படுகிறது. எஸ்டேட் பகுதிகளுக்குள் புகும் யானைகள் குடியிருப்பு, ரேஷன்கடை, மளிகை கடை, பேக்கிரி கடைகளை உடைத்து பொருட்கள் தின்று விடுகின்றன. இதுதவிர மனித- விலங்கு மோதலில் உயிரிழப்பு ஏற்படுகிறது. யானைகளிடம் தப்பிக்க வால்பாறை பகுதியில் வன ஆர்வ தனியார் அமைப்பு யானை உள்ள பகுதிகள் குறித்து எஸ்.எம்.எஸ் அனுப்புகின்றன. யானை உள்ள எஸ்டேட் பகுதிகளில் சிவப்பு மின்விளக்கு வைத்து எச்சரிக்கை விடுக்கின்றனர். வனத்துறையின் மனித- விலங்கு மோதல் தடுப்பு பிரிவினர் இரவு ரோந்து மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் புகுந்தால் தடுத்து வனத்திற்குள் விரட்ட முயற்சி மேற்கொள்கின்றனர். இந்நிலையில் வால்பாறை பகுதிக்கு தற்போது கேரளாவில் இருந்து யானைகள் வந்தவண்ணம் உள்ளது. மயிலாடும்பாறை, பன்னிமேடு, நல்லமுடி உள்ளிட்ட பகுதிகள் வழியாக யானைகள் ஊடுருவ தொடங்கி உள்ளது.நேற்று 11 யானைகள் சிறுகுன்றா எஸ்டேட்டில் தேயிலைத் தோட்டங்களில் முகாமிட்டிருந்தது. வால்பாறை வந்த சுற்றுலா பயணிகள் யானைகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் தொழிலாளர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்….
The post வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாம், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி; தொழிலாளர்கள் அச்சம் appeared first on Dinakaran.