மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை 32 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது: 25,000 ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, 32 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால், சம்பா நேரடி மற்றும் நடவு நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் இருந்து வருகின்றனர். கொள்ளிடம் பகுதியில் பாரத்சேகர்நகர், தோப்பு தெரு, எவரெஸ்ட்நகர், மணிநகர், தைக்கால் மற்றும் கொள்ளிடம் அருகே நல்லூர், பரவென்காடு, திருக்கருகாவூர் காட்டூர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கொள்ளிடம் வட்டாரத்தில் 13,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் சம்பா நேரடி விதைப்பு மற்றும் நடவு நெற்பயிர் செய்யப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இருந்தது. இந்நிலையில் மீண்டும் நேற்று மழை விட்டுவிட்டு பெய்து வருவதால் நெற்பயிர் முழுவதும் அழுகும் அபாய நிலையில் உள்ளது. தமிழகத்திலேயே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. சீர்காழியில் 122 ஆண்டுகளுக்கு பிறகு 44 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை மழை விட்டிருந்த நிலையில், வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடிய தொடங்கியது. இதேபோல் நடவு செய்த வயலில் புகுந்த தண்ணீர் வடிய தொடங்கியது. இந்நிலையில் மீண்டும் நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 10 மணி வரை தொடர்ந்து இடைவிடாமல் கொட்டித்தீர்த்தது.மாவட்ட கலெக்டர் லலிதா நேற்று அளித்த பேட்டி:மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழுக்கு பருவமழை மிக அதிகமாக பெய்து வருகிறது. கடந்த 11ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 12 மணிவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறுகாணாத மழை பெய்துள்ளது. இதில் சராசரி அளவைவிட சீர்காழியில் அதிகபட்சமாக 43 செ.மீ, கொள்ளிடத்தில் 31.7 செ.மீ, செம்பனார்கோயிலில் 24.2 செ.மீ., மழை பெய்துள்ளது. மழையினால் மனித உயிரிழப்பு எதுவும் இல்லை. இது வரை வீடுகள். கால்நடைகள் சேதம் அடைந்த நிலவரங்கள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. தற்போது 160 குழசை வீடுகள் சேதமடைந்துள்ளன. 4 மாடுகள், 10 ஆடுகள், 9 கன்றுகுட்டிகள் இறந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாய நிலம் 31,000 ஹெக்டேர் (77,500 ஏக்கர்) நெற்பயிர் நீரில் முழ்கி உள்ளது. 32 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கிராமங்களில் 32 முகாம்களில் 7,156 குடும்பங்களை சேர்ந்த 16,577 பேர் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.சுவர் இடிந்து விழுந்து பெண் பலி தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் இந்தளூர் கிராமம் நெடுங்குளம் குடியான தெருவை சேர்ந்தவர் முருகையா (65). இவரது மனைவி செல்லபாப்பா (55). இவர்களுக்கு பவித்ரா (21) என்ற மகள் உள்ளார். செல்லபாப்பா தொழுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் அவதிப்பட்டு வருகிறார். அவர் வீட்டின் திண்ணையில் படுத்து இருப்பது வழக்கம். இந்நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் முன் பகுதி சுவர் இடிந்து தூங்கிக் கொண்டிருந்த செல்லபாப்பா மீது விழுந்தது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.மீன்பிடிக்க சென்ற வாலிபர் ஆற்று வெள்ளத்தில் மாயம்கள்ளக்குறிச்சி வஉசி நகரை சேர்ந்தவர் கரண்ராஜ்(22). இவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் 4 நண்பர்களுடன் நேற்று முன்தினம் மதியம் சோமண்டார்குடி கோமுகி ஆற்றிற்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கோமுகி அணையில் இருந்து 3000 கனஅடி நீரை கோமுகி ஆற்றில் திறந்துவிட்டனர். இதனால் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது கரண்ராஜ் மட்டும் ஆற்றில் இறங்கியதாக தெரிகிறது. அவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது….

The post மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை 32 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது: 25,000 ஏக்கர் நெற்பயிர் அழுகும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: