போட்ட இடத்தில் தேடு!

‘‘கிரக அமைப்புகள் இப்படி எல்லாம் இருந்தால் இது பிதுர் சாபம். இது பெண் சாபம் என்றெல்லாம் சில ஜோதிடக் குறிப்புகள் இருப்பது உண்மைதான் என்றாலும், அதை வைத்துக்கொண்டு நம்மால் தீர்க்கமாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.’’ இப்படி நான் சொன்னவுடன் நண்பர் கேட்டார்.  ‘‘அப்படியானால் இதனை எப்படித் தான் அறிவது?’’ நான் அவரிடத்திலே சொன்னேன்.

‘‘ஒரு விஷயத்தை தர்க்க ரீதியாக அணுகுவதற்கும், தீர்வு காண்பதற்கும் மூன்று விஷயங்களை இணைப்பார்கள். ஒன்று காரணங்கள் (causes). இன்னொன்று விளைவுகள் (Effects). மூன்றாவது பரிகாரங்கள். (solutions or remedies) இது உலகியலுக்கும் பொருந்தும்.’’ ‘‘எப்படி?’’

‘‘ஒரு வண்டியை தாறுமாறாக கண்ணை மூடிக்கொண்டு ஓட்டினால் அந்த வண்டி விபத்தில் சிக்குவது நிச்சயம்’’

‘‘ஆமாம்’’

‘‘கண்ணை மூடிக்கொண்டு ஓட்டுவது காரணம் (cause). வண்டி விபத்துக்குள்ளாவது விளைவு (effect)’’

‘‘சரி’’

‘‘விளைவு ஒன்றாக இருந்தாலும், காரணங்கள் வெவ்வேறாக இருக்கும். ஜுரம் என்பது விளைவு. காரணம் ஒரே காரணமாக இருக்காது அல்லவா’’

“…”

“உதாரணமாக, வண்டி சரியாக இல்லாவிட்டாலும் விபத்து நேரும். ஓட்டுபவர் சரியில்லாவிட்டாலும் விபத்து நேரும். பாதை சரியாக இல்லாவிட்டாலும் விபத்து நேரும். எனவே விபத்து என்பது ஒரு விளைவுதான். ஆனால், அதற்கான காரணங்கள் வெவ்வேறு. காரணங்கள்தான் விளைவைத் தருகின்றன. இந்தக் காரணங்களை சரி செய்தால் விளைவுகளில் இருந்து தப்பிக்கலாம்’’.

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம். சரியாக ஓட்ட முடியாதவனை வண்டி ஓட்ட சொல்லக்கூடாது. சாலை சரியில்லை அதனால்தான் விபத்து ஏற்படுகிறது என்று சொன்னால் சாலையை சரி செய்ய வேண்டும். வளைவுகளைக் குறைக்க வேண்டும். இதில் விபத்தின் காரணமாகிய சாலையைச் சரி செய்தல் என்பதுதான் பரிகாரமாக இருக்கிறது. அதாவது தீர்வாக இருக்கிறது.”

“………..”

“வண்டியின் பிரேக் சரியில்லை, லைட் சரியில்லை, டயர் சரியில்லை என்று எத்தனையோ காரணங்களை இதிலேயே சொல்லலாம். இப்போது வண்டியைச் சரி செய்ய வேண்டும். அதற்காகத்தான் அவ்வப்போது வண்டியை பரிசோதனை செய்து, சாலையில் ஓட்டுவதற்குத் தகுதியானது என்று சான்றிதழ் தருகிறார்கள்.’’ ``காரணம் வெவ்வேறானதாக இருக்கும்.

காரணத்துக்கு தகுந்தவாறு பரிகாரம் அதாவது தீர்வினைச் சொல்லுகின்றார்கள். இதை அப்படியே நீங்கள் வாழ்க்கைக்கு கொண்டு வந்தால் விளைவுகளில் இருந்து காரணத்தைக் கண்டுபிடித்து தீர்வினைச் சொல்லலாம். கிரக நிலையை வைத்துக் கொண்டு தீர்வுகளைச் சொல்வது பல நேரத்தில் சரியாக இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.”

“………..”

“பிதுர் சாபத்திற்கு உரிய கோள்கள் உள்ள பல ஜாதகங்கள் நல்ல படியாகவே இருக்கின்றன. வியாபாரம் நன்றாக நடக்கிறது. சுபகாரியங்கள் நடக்கின்றன. நோய் நொடி இல்லாமல் திடகாத்திரமாக இருக்கிறார்கள். தேவையில்லாமல் அவர்களுக்கு ஏன் பரிகாரங்களைச் சொல்ல வேண்டும்? இதில் இன்னொரு அனுபவத்தையும் சொல்லுகின்றேன்.”

“ஒரு குடும்பத்தினர் வியாபாரம் செய்தார்கள். அதென்னமோ தெரியவில்லை. அவர்கள் எத்தனை முயற்சி செய்தாலும் அடுத்தடுத்து வியாபாரத்தில் தோல்விதான் வந்தது” “தங்களுக்கு தெரிந்த ஜோதிடரிடம் போனார்கள்’’. ஜோதிடர், ‘‘உங்களுக்கு சனி கிரகம்தான் தொல்லை தருகிறது’’ என்று ஏதோ ஒரு பரிகாரம் சொன்னார், செய்தார்கள், சரியாகவில்லை. இன்னொரு ஜோதிடரிடம் தேடிச் சென்றார்கள். அவர் குரு தோஷம் உண்டு.

அதற்கு நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்றார். சில ஆயிரம் ரூபாய் செலவழித்துச் செய்தார்கள். அங்கேயும் ஒன்றும் முடியவில்லை.’’‘‘வீட்டில் லட்சுமி குபேர யாகம் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் உங்களுக்கு இந்தச் சங்கடங்கள் தீர்ந்துவிடும்’’ என்று, ஹோமம் செய்ய சிலரை அனுப்பி வைத்தார். ஹோமம் நடந்தது. ஆனால், எந்தப் பலனும் இல்லை. கடைசியில் அவர்கள் ஒரு ஜோதிடரிடம் வந்தார்கள். அந்த ஜோதிடர் வெகு நேரம் கணக்குப் போட்டார்.

ஜாதகத்தை அக்கு வேறு ஆணிவேராக அலசினார். அவருக்கு ஓரளவு சூழல் புரிந்தது.  பெரிய அளவில் கிரக தோஷங்கள் தெரியவில்லை. ஆனால் விளைவு என்னமோ கடுமையாக இருக்கிறது.”

சில நோயைக் கண்டுபிடிக்கவே முடியாது. பரிசோதனைகள் ஒன்றும் இல்லாதது போலவே காட்டும். அப்பொழுது செய்கின்ற வைத்தியங்களும் தற்காலிகமாக பலன் தருமே தவிர நோய் முன்னிலும் தீவிரமாகிப் போகும். அதைப் போலவே சில நேரங்களில் கிரக நிலைகளைப் பார்த்தால் பெரிய அளவில் பாதிப்பு இருப்பது போல் தெரியாது. ஆனால் ஜாதகத்தில் ஏதோ ஒன்று எதிர்மறையாக வேலை செய்து கொண்டிருக்கும். ஜோதிடர் பொறுமையாகச் சொன்னார்;

“நீங்கள் இதுவரை எத்தனையோ பரிகாரங்கள் செய்துவிட்டீர்கள். அதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இப்போது ஒரு விஷயத்தை நீங்கள் செய்தால் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.’’ வந்தவர்கள் ஆவலோடு கேட்டார்கள்.

‘‘எவ்வளவோ ஜோதிடர்கள் எவ்வளவோ சொல்லிவிட்டார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’’அவர் ஒரே வார்த்தையில் சொன்னார்;  ‘‘போட்ட இடத்தில் தேடுங்கள். பொருள் கிடைக்கும்’’ அவர்களுக்குப் புரியவில்லை. ஜோதிடர் விளக்கினார். ‘‘நீங்கள் மிகப்பெரிய தவறு ஏதோ ஒன்று செய்து இருக்கிறீர்கள். அந்தப் பாவம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நிழல் போல உங்களைச் சுற்றிக்கொண்டு உங்களைச் செயல்பட விடாமல் தடுக்கிறது. அது ஜாதகத்தில் இருந்து கண்டுபிடித்தது அல்ல. உங்களுக்கு நடைமுறையில் அப்படித்தானே இருக்கிறது. நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் காரியம் நடக்கவில்லை.

அப்படி என்றால் என்ன பொருள்? உங்களால் அல்லது உங்கள் குடும்பத்தால் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒரு குடும்பம், ஏதோ ஒரு இடத்தில் தட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது. அங்கே போய் நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும். பிறகு தெய்வத்திடம் வாருங்கள். உங்கள் செயலுக்கு நீங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேளுங்கள்.’’ ‘‘என்ன தவறு? நாங்கள் யாருக்கு செய்தோம்’’ ‘‘நீங்கள் தனிமையில் யோசித்துப் பாருங்கள். நாம் செய்கின்ற பல தவறுகள் நமக்கு நினைவுக்கு வருவதே கிடையாது. நீங்களோ, உங்கள் அப்பாவோ, தாத்தாவோகூட, இந்தத் தவறைச் செய்திருக்கலாம். முயற்சி செய்து கண்டுபிடிங்கள். முடியாவிட்டால் மறுபடியும் வாருங்கள். வேறு ஆராய்ந்து பார்க்கலாம்’’.

சென்றவர் ஆறு மாதம் கழித்து வந்தார். கடந்த மூன்று மாதங்களாக தன்னுடைய குடும்பம் நல்லபடியாக இருப்பதாகவும், வியாபாரமும் படிப்படியாக வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார். ஜோதிடர் கேட்டார்;

‘‘பரிகாரம் செய்தீர்களா?’’

‘‘செய்து விட்டோம்’’

‘‘உங்களுக்கு தீர்வு கிடைத்ததா?’’

‘‘கிடைத்தது’’

‘‘எங்கே தீர்வு கிடைத்தது?’’

‘‘போட்ட இடத்தில் தேடினோம். தீர்வு கிடைத்தது’’ என்றார்கள்.  என்ன விஷயம் என்று சொன்னால், அவர்கள் தங்கள் குடும்பத்தாரோடு விவாதித்து, தங்கள் குடும்பத்தால் நாற்பது வருடங்களுக்கு முன் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் நிலைமை முன்னேற உதவினார்கள். உண்மையில் இந்தப் பரிகாரம் உடனே வேலை செய்தது.

நன்மைக்கு தடையாக இருந்த பாவமானது, பரிகாரம் செய்த பின், நன்மை தர ஆரம்பித்து விட்டது. கடைசியாக அவரிடம் ஒரு குறிப்பு கொடுத்தேன். உங்கள் ஜாதகம் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்களுக்கு வருகின்ற துன்பங்களை நினைத்து நீங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், ‘‘நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்?’’ ‘‘எனக்கு ஏன் இப்படி வருகிறது?’’ என்று யோசியுங்கள். மாலை நேரத்தில் பூஜை அறையில் ஒரு விளக்கு வைத்து, வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல், தெய்வத்தின் முன் அமருங்கள்.

தொல்லை தரும் கிரகமே உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஒரு வார்த்தையாக, அல்லது ஏதோ ஒரு நண்பரின் மூலமாக, ஒரு தீர்வினைக் கொண்டு வந்து உங்களுக்குக் கொடுக்கும். அந்தத் தீர்வினை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம் கிடைக்கும். சாபங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

தொகுப்பு: தேஜஸ்வி

Related Stories: