விளைவுகள் தெரிந்தால் பாவங்களில் இருந்து தப்பிக்கலாம்!

பாவங்களைப் பற்றியும், சாபங்களைப் பற்றியும் நம்முடைய புராண இதிகாசங்களில் மிக விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பாவம் என்ன விளைவைத் தரும்? ஒரு சாபம் என்ன விளைவைத் தரும்? என்பதைப் பற்றி தர்மசாஸ்திர நூல்களிலும், குறிப்பாக கருட புராணத்திலும் மிக அற்புதமாகக் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாசுரங்களிலும் இவை எதிரொலிக்கும். என்னென்ன பாவங்களுக்கு, என்னென்ன நரகங்கள் என்பதைக் குறித்தும் கருட புராணத்தில் உண்டு. இவற்றின் அடிப்படையில் திருமங்கை ஆழ்வார், ஒரு அருமையான பாசுரம் பாடுகின்றார். அவர் விவரிக்கும் காட்சியைப் பாருங்கள். ஒருவன் தன்னுடைய மனைவியை அடித்து, உதைத்து, துரோகம் செய்து, அவளை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டான். இது ஒரு மிகப்பெரிய பாவம் என்றால், இதற்கு மேலே மற்றொரு பாவம் செய்தான்.

மற்றவர்கள் பொருட்களைக் கவர்ந்தான். அதனால், வசதியாக வாழ்ந்தான். ஆணவத் தோடு திரிந்தான். நல்ல குடும்பத்தைப் பிரித்து பலவந்தமாகப் பிறர் மனைவியைத் தனக்குச் சொந்தம் ஆக்கிக்கொண்டான். அவனுக்கு என்ன தண்டனை வழங்கப்பட்டது தெரியுமா? ஒரு அழகான செம்பினால் ஆன பெண்ணினுடைய பொம்மை.

அவன் காம வயப்பட்டு எந்தப் பெண்ணை விரும்பி அபகரித்தானோ, அதைப்போன்ற உருவம் படைத்த அந்த பொம்மை, கொதிக்கின்ற நெருப்பினில் காய்ச்சப்பட்டு தகதக என்று மின்னிக்கொண்டிருக்கிறது. கை வைத்தாலே பொசுங்கி விடும். இப்பொழுது அவனிடம் சொல்லப்பட்டது. ‘‘கொண்ட மனைவியை கொடுமை செய்து விரட்டிவிட்டு, இந்தப் பெண்ணைத் தானே விரும்பினாய். இப்பொழுது இந்தப் பெண்ணை நீ தழுவு’’ என்று விரட்டினார்களாம்.

விரல் பட்டாலே உருகிவிடும் அந்த வெப்பப் பதுமையை நெருங்க அஞ்சி கதறினானாம்.  மனிதர்கள் பாவம் செய்வதற்கு அஞ்சி, கொஞ்சமாவது தர்ம வழியில் செல்வார்களே என்பதற்காக திருமங்கையாழ்வார் நைமிசாரண்யம் என்கின்ற திவ்ய தேசத்தில் பாடியது இந்தப் பாசுரம்.

வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து

பிறர் பொருள் தாரம் என்று இவற்றை

நம்பினார் இறந்தால் நமன் தமர் பற்றி

எற்றி வைத்து எரி எழுகின்ற

செம்பினால் இயன்ற பாவையைப் பாவீ

தழு வென மொழிவதற்கு அஞ்சி

நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன்

நைமி சாரணி யத்துள் எந்தாய்

‘‘கேட்பதற்கே நடுங்குகிறது. பாவங்களைப் போலவே சாபங்களிலும் வகைகள் உண்டா?’’ என்று கேட்டார் நண்பர்.

“சாபங்கள் பல வகை உண்டு. மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்கிறார்கள்.”

“அப்படியா?’’

1) பெண் சாபம்

2) பிரேத சாபம்

3) பிரம்ம சாபம்

4) சர்ப்ப சாபம்

5) பித்ரு சாபம்

6) கோ சாபம்

7) பூமி சாபம்

8) கங்கா சாபம்

9) விருட்ச சாபம்

10) தேவ சாபம்

11) ரிஷி சாபம்

12) முனி சாபம்

13) குலதெய்வ சாபம்

“பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது, பெண் சாபம். இந்த சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.”

“இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களைச் செய்ய விடாமல் தடுப்பதும், இறந்தவரின் வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும், பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.”

“நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பதும், வித்தையை தவறாக பயன்படுத்துவதும், மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பதும், நன்றி மறப்பதும் குருசாபம் தரும். குருசாபம் எனும் பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.”

“பாம்புகளைக் கொல்வதாலும், அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும். சுபகாரியத் தடையும், திருமணத் தடையும் ஏற்படும்.”

“முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி போன்ற நீத்தார் காரியங்களைச் செய்யாமல் மறப்பதும், தாய் - தந்தை, தாத்தா - பாட்டி போன்றோரை உதாசீனப் படுத்துவதும், அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் சந்ததி விருத்தியைத் தடுக்கும்.”

“பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பதும், கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பதும், தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காததும் கோ சாபம் தரும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.”

“ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு செய்வதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமிசாபத்தை உண்டாக்கும். பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.”

“பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.”

“பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.”

“தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவதும், தெய்வங்களை இகழ்வதும் தேவ சாபம் தரும். தேவ சாபத்தால் உறவுகள் பகையாகும்.”

“இந்த கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும், உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும் ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.”

“எல்லைத் தெய்வங்கள், மற்றும் சின்னச்சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.”

“முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறப்பது குலதெய்வ சாபம். குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் அமைதி குறையும். காரியத் தடை இருக்கும்.”

‘‘பாவங்களுக்கும், சாபங்களுக்கும் சிறிய வேறுபாடு உண்டு. பெரும்பாலான பாவங்களுக்கு பிராயச்சித்தம் உண்டு. ஆனால் சாபங்களை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும்’’

‘‘எல்லா பாவமும் பிராயசித்தத்தால் கழியுமா?’’ - என கேட்டார் நண்பர்.

‘‘அப்படி அல்ல. அதிலும் வேறுபாடு உண்டு. பிராயச்சித்தம் இல்லாத பாவங்கள் கிட்டத்தட்ட சாபங்களுக்கு நிகரானவைதான். அவற்றுக்கு மகாபாதகங்கள் அல்லது மா பாவங்கள் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள். அவைகள் கடும் குற்றங்கள். மனதை நடுங்க வைக்கும் இரக்கமில்லாத செயல்கள்.’’

‘‘சரி, இவற்றை நாம் ஜாதகங்களில் தெரிந்து கொள்ளமுடியுமா?’’

 

‘‘ஓரளவு ஊகித்துத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், நிச்சயமாக இந்த பாவம்தான் என்பதை நம்மால் வரையறுத்துச் சொல்லமுடியாது. உதாரணமாக ஒருவரின் ஜாதகத்தில் 1,3,5,7,9,11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாகக் கருதப் படும் என்று இருக்கிறது. நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் நமது முன் வினைகளை பிரதிபலிப்பவை என்கிறார்கள். மேலும், ராகு தந்தை வழிப்பாட்டனாரைக் குறிக்கும் கிரகம். கேது தாய் வழிப் பாட்டனாரைக் குறிக்கும கிரகம். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினைத் தெளிவாகக் காட்டுபவை என்று இருக்கிறது’’.

‘‘இது சரியா?’’

‘‘அனேகமாக நூற்றுக்கு 80 ஜாதகங்களுக்கு மேல் இந்த அமைப்பு இருக்கும். ஒரு குறிப்பிட்ட லக்னத்தில், பல்லாயிரக்கணக்கான பேர் பிறக்கிறார்கள். எந்த நாளிலும் ஒரு குறிப்பிட்ட லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த அமைப்பு வந்துவிடும் என்பதால், கோடிக்கணக்கான பேர் இதனால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆகையினால், இந்த அமைப்பைக்கொண்டு திட்டமாக நாம் சாபத்தையோ பாவத்தையோ வரையறுக்க முடியாது. ஒருசில அனுபவமிக்க ஜோதிடர்கள் சில சூட்சும விஷயங்களை வைத்து தீர்மானிக்கமுடியும். ஆனால், அப்படிப்பட்ட ஜோதிடர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்கள்தான். அந்த வாக்கும் எல்லா நேரத்திலும் பலிக்காது.’’

அப்படியானால் என்னதான் வழி என்று ஆர்வத்தோடு நண்பர் கேட்டார். நான் சொல்லத் தொடங்கினேன்.

(அடுத்த வாரம்…)

தொகுப்பு: தேஜஸ்வி

Related Stories: