ஈட்டிய செல்வத்தில் மிச்சம் தருவாள் கிச்சம்மாள்

நம்ப ஊரு சாமிகள்

மல்லி, ஸ்ரீவில்லிப்புத்தூர்

சிவகாசி மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே டி.சுப்புலாபுரம் ஊரில் வாழ்ந்து வந்தார் கேசவன். இவருக்கு ஐந்து ஆண்குழந்தையும், ஒரு பெண்குழந்தையும் பிறந்தனர். கடைசி பிள்ளை பிறந்த சமயத்தில் கேசவனின் மனைவி இறந்துவிட்டார். மனைவி இறந்த மறு வருடம் கேசவனும் இறந்துவிட்டார்.

கிருஷ்ணம்மாள் கிச்சம்மாள் ஆனாள்

பெருமாள் மீது அதிதீவிர பக்தி கொண்ட காரணத்தினால் மகன்களுக்கு ஸ்ரீநிவாசன், ஏழுமலை, நாராயணன், பெருமாள், கிருஷ்ணம்மாள், ஜெயராமன் என ஆறுபிள்ளைகள். நான்கு அண்ணன்கள் ஒரு தம்பி என உடன்பிறப்புகள் இருந்தாலும், தாய் தந்தை இல்லையே என்ற கவலை கிருஷ்ணம்மாளை வாட்டியது. கிருஷ்ணா என்ற பெயரை கிச்சா என்று சுருக்கமாக அழைப்பதுண்டு. அந்த வகையில் கிருஷ்ணம்மாளை, கிச்சம்மா என்றே செல்லமாக அழைத்துவந்தனர்.

குணம் கெட்ட அண்ணியர்களால் மனம் குறைபட்ட கிச்சம்மா

கிச்சம்மா அண்ணன்களின் செல்லத் தங்கையாக வளர்ந்து வந்தாள். அண்ணன்களின் திருமணத்திற்கு பிறகு அந்த ஊரில் செல்வாக்கான குடும்பத்தின் ஒரே பெண்வாரிசாக இருந்த கிச்சம்மாளுக்கு குணம் கெட்ட அண்ணியர்களால் மனம் குறைபட்டுபோனது. அண்ணியர்களில் ஒருவர்கூட நாத்தனாரின் மேல் பாசம் கிடையாது. அண்ணன்கள் மட்டும்தான் ஆதரவு. அண்ணன்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டால், கிச்சம்மாவைச் சாப்பிடச் சொல்லவோ, நலம் பேணவோ, சிரித்துப் பேசி வீட்டில் ஒருவராக கருத யாருமில்லை. அண்ணன் குழந்தைகளை வளர்க்க சம்பளமில்லாத வேலைக்காரி போல் பிறந்த வீட்டில் இருந்தாள் கிச்சம்மாள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனிமையும், தனக்கு யார் இருக்கிறார்கள் என்ற எண்ணமும் அவளை வாட்டத் தொடங்கியது.  அப்போது, வியாபாரம் செய்யும் சுயம்புலிங்கம் குடும்பத்துடன் கிச்சம்மாள் வீட்டிற்கு பக்கத்தில் குடியிருந்தார். அவரது வீட்டுப்பெண்கள் கிச்சம்மாவிடம் அன்பாகப் பழகி வந்தார்கள். சொந்த வீட்டில் அன்பு கிடைக்காததால், அண்டை வீட்டில் கிடைத்த அன்பு கிச்சம்மாவிற்கு ஆதரவாக இருந்தது.

சுயம்புலிங்கம் வீட்டுப் பெண்களுடனேயே பகல் பொழுது முழுவதும் கிச்சம்மாள் கழிக்கத் தொடங்கினாள். தாயம் ஆடுவது, பல்லாங்குழி ஆடுவது, ஆற்றுக்குத் தண்ணீர் எடுத்து வர ஒன்றாகப் போவது, வருவது என்று ஒரு தாய் மக்களாகப் பழக ஆரம்பித்துவிட்டார்கள். இதை எல்லாம் அன்றாடம் பார்த்துக்கொண்டே இருந்த அண்ணிகளுக்கு கிச்சம்மா நிம்மதியாக இருப்பதைக் கண்டு பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

சகுனியாக வேலைபார்த்த அண்ணிகள்

அண்ணன்கள் வீடு திரும்பியதும், தங்கையைப்பற்றி விசாரிக்கும் போதெல்லாம், சாடைமாடையாக அவளது நடத்தையைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக சொல்ல ஆரம்பித்தனர். முதலில் தங்கள் தங்கை அப்படிப்பட்டவள் இல்லை என்று மனைவிகளிடம் சண்டையிட்ட அண்ணன்மார்கள், நாளாக...நாளாகத் தங்களது சண்டையில் வலுவிழந்தனர். காரணம் கிச்சம்மாள், சில நாட்களாகவே அண்ணன்கள் வீடு திரும்பிய பிறகும்கூட வெகுநேரம் கழித்து வீடு திரும்பியதுதான்.

ஒருநாள் மூத்த அண்ணன் வந்து கிச்சம்மாவிடம், நீ இனிமேல் அந்த வீட்டுக்குப் போகாதே என்று மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டார். காரணம்புரியாமல் கலங்கினாள் கிச்சம்மாள். இருப்பினும் யாரும் ஒரு வார்த்தைகூட பேசாமல் இருக்கும் சொந்த வீடு சிறை போல இருந்ததால், அண்ணன் பேச்சை பொருட்படுத்தாமல் சுயம்புலிங்கம் வீட்டிற்கு சென்றாள்.

திருமணத்திற்கு ஏற்பாடு

இளைய அண்ணன் வந்து தங்கையிடம், ``ஏனம்மா பெரிய அண்ணன் தடுத்தும்கூட நீ அங்கே போயிட்டு வந்திட்டுருக்கிற.. போதும் இனி போகாத!’’ என்றிருக்கிறான். கிச்சம்மாவுக்கு இப்போதும் காரணம் தெரியாவிட்டாலும், எதிர்த்துக் கேள்வி கேட்டுப் பழக்கமில்லாத காரணத்தால், ஏதோ ஜாதிக்காகச் சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று அமைதியாகிவிட்டாள். அதோடு அன்றைக்கு பெரிய அண்ணன், தங்கைக்கு நல்ல வரன் அமைந்திருப்பதாகவும், கூடிய சீக்கிரம் கல்யாணம் வைத்துவிட வேண்டியதுதான் என்றெல்லாம் கூறவே, கிச்சம்மா சந்தோசமானாள்.

கூடவே கல்யாணமான பிறகு, தான் எந்த ஊரில் வாழப் போகிறோமோ? கடைசியாக இன்று ஒரு நாள் மட்டும் அந்த வீட்டுக்குப் போய் கல்யாண சேதியைச் சொல்லிவிட்டு வந்துவிடலாம் என்று அண்ணன்கள் வெளியேறியதும் இவள் அண்டை வீட்டிற்குச் சென்றாள்.  சும்மாவே வெறும் வாயைமென்று கொண்டிருந்த அண்ணிகளுக்கு, அவல் கிடைத்தால் விடுவார்களா என்ன? அவளைப் பற்றி வாயில் வராத வார்த்தைகள் பலவற்றை சொல்லி தங்களுக்குள் புறம் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த நேரம் கோடாரியை எடுப்பதற்காக வயலுக்குப் போன மூன்றாவது அண்ணன், வீட்டுக்கு திடீரென வந்தான். அவர் காதுகளில் அண்ணிமார்களும் தனது மனைவியின் பேச்சும் காதில் விழுந்தது. ‘‘கல்யாணம் பேசி முடித்த ஒரு வயசுக்கு வந்த பெண்,இப்படியா.. வெட்கம் கெட்டுப்போய் அந்த வீட்டுக்கு ஓடுவாள்? அப்படி அந்த வீட்டுல என்னதான் இருக்கு?’’

`‘இத்தனைக்கும், அவளது அண்ணன்கள் கண்டித்தும் அவள் இப்படி செய்தாளானால் அண்ணன்களின் கௌரவம் என்ன ஆவது? ஊர் என்ன பேசும்?’’

`‘அவளுக்கென்ன. ஊரெல்லாம், அவளை வளர்த்த அண்ணன்களைத் தானே குறை சொல்லி நாக்கை பிடுங்கிக் கொள்ளும்படி கேள்வி கேட்கும்? இவளை எல்லாம் நகை நட்டு செலவு செய்து இன்னொரு இடத்துக்கு வாழ அனுப்பினால், அங்கே போயும் இப்படி நடந்துகொள்ளமாட்டாள் என்று என்ன நிச்சயம்?’ என்று கிச்சம்மாளை  வறுத்தெடுத்தன.

திருமணத்தகவலை நட்புகளிடம் தெரிவித்த சந்தோஷத்தில் கிச்சம்மாள் வீடு திரும்பினாள். இதனிடையே மூன்றாவது அண்ணன் சென்று மற்ற அண்ணன்களிடமும், தம்பியிடமும் போய் சொல்ல, மறு கணமே அத்தனை பேரும் வீடு திரும்பினர்.

எமனாக மாறிய அண்ணன்

மறுநாள் பொழுது விடிந்தது. பெரிய அண்ணன், இரண்டாவது அண்ணனிடம் ``ஏய், தம்பி கோழி அடிடா’’, என்றார். அந்த வார்த்தைக்காக காத்திருந்தது போல் மொத்த உறவுகளும் சரி என்று வீட்டில் தடபுடலாக கோழி அடித்துக் குழம்பு வைத்தனர். சமையல் முடிந்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து தங்கையுடன் சாப்பிட்டனர். அண்ணன்கள் ஒவ்வொருவரும் பாசம் மிகுந்து தங்கைக்கு மாறிமாறி பரிமாறினர். அவர்களின் பாசத்தைக் கண்டு, கிச்சம்மாவுக்கு நெஞ்சடைக்க அழுகை வந்தது.

இப்படிப்பட்ட பாசக்கார அண்ணன்களை விட்டுவிட்டு யாரோ ஒரு ஆளைக் கல்யாணம் செய்து கொண்டு, இன்னொரு வீட்டுக்கு போகப் போகிறோமே! என நினைத்து நினைத்து மறுகிக் கொண்டிருந்தாள். எல்லோரும் சாப்பிட்டு முடித்தார்கள். உச்சி வேளை முடிந்தது. கிச்சம்மா, வீட்டின் பின்வாசலுக்கு வந்து வேப்பமரத்தின் அடியில் பாய் விரித்து தலையணை வைத்து ஒருக்களித்து படுத்து கண் அயர்ந்தாள். தன்னைக் காப்பாற்ற அண்ணன்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு தூங்கினாள்.

சிறிது நேரத்தில் தலைமாட்டில் ஆள் நடமாடும் சத்தம். அரைக்கண் தூக்கமாய் விழிகளை மலர்த்தினாள். அம்மிக்குழவியை ஏந்தியவாறு பெரிய அண்ணன் நின்றார். கிச்சம்மா கை, கால்கள் பதற, வார்த்தைகள் சிதற, அண்ணா.. என்பதற்குள் அந்த பாசமிக்க அண்ணன், அம்மிக்குழவியை கிச்சம்மா மேல் போட்டான். முகம் சிதைந்த நிலையில் ‘‘என்ன தவறு நான் செய்தேன் அண்ணா’’ என்றபடி விழிகளை மூடி உயிரைவிட்டாள் கிச்சம்மா. முந்தி வந்து சந்தி சாயும் அந்திக் கருக்கல் நேரம் அது. சந்தி என்றால் சந்திரன் என்று பொருள். சாயும் என்றால் மறையும் என்பதாகும்.

தெய்வமானாள் கிச்சம்மாள்

கிச்சம்மாள் இறந்த மறு ஆண்டு சுயம்புலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் மூன்று பேர், தங்கள் வியாபாரத்தை முடித்துவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு வருகையில் T.சுப்புலாபுரம் அருகே ஒரு புயல் காற்று வீசியது. அந்த புயல் காற்றில், அவர்கள் கொண்டு வந்த பணம் அனைத்தும் காணாமல் போனது. பணம் காணாமல் போனதைக் கண்டு வருத்தமடைந்தனர். அவர்கள் முன்பு ஒரு பருவப்பெண் தோன்றி, ``பணம் இந்த இடத்தில் உள்ளது’’ என்று பணம் இருக்கும் இடத்தைக் காட்டியது. பணம் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்த அவர்கள், அந்த பெண்ணை வணங்கினர்.

அப்போது, ‘‘அம்மா, நாங்கள் ராப்பகலா உழைச்சாலும் பணம், வீடு தங்கமாட்டேங்குது. இதுல காத்துல பணம் போனதும், எங்க உசுரே போயிட்டும்மா’’ என்று கண்கலங்கினர். அந்த நேரம் அந்த பெண் உருவம் அந்த இடம் விட்டு மறைந்தது. பின்னர் அசிரீரி ஒலித்தது.  ‘‘என்னை பூஜித்து வாருங்கள். நீங்கள் உழைத்த பணம் மிச்சமாகும். கிச்சம்மா நான் துணையிருப்பேன்’’ என்றது.

பணம் தொலைந்து கண்டெடுக்கப்பட்ட இடமான ஸ்ரீவில்லிப்புத்தூர் மதுரை ரோட்டில் T.சுப்புலாபுரம் அருகே உள்ள புளியந்தோப்பில், சுண்ணாம்பு மண்ணால் பீடம் அமைத்து கிச்சம்மா என்ற நாமத்தோடு வழிபட்டனர். ஸ்ரீவில்லிப்புத்தூர், மல்லி என்கிற ஊரில் கிச்சம்மாவிற்கு தனியாக கோயில் எழுப்பி

வழிபட்டு வருகின்றனர். சம்பாதித்த பணம் தங்கணுமா வாருங்கள் கிச்சம்மா கோயிலுக்கு.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

Related Stories: