கோடி புண்ணியம் தரும் திருநாங்கூர் கருட சேவை

22-01-2023

கருட சேவை

பெருமாள் எத்தனையோ வாகனங்களில் வீதி உலா வந்தாலும், கருட வாகனத்தின் மீது வலம் வந்து காட்சி தருவது என்பது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. எந்த திவ்ய தேசத்திலும் கருட சேவை என்றால் அன்றைக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவார்கள். கருட சேவை பார்த்தால் பெரும் புண்ணியம் என்று கருதுவார்கள். அந்த கருட சேவைகளிலே காஞ்சிவரதர் கருட சேவையும், புரட்டாசி திருமலை பிரம்மோற்சவத்தில் நடக்கும் கருட சேவையும், ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நவ திருப்பதி கருட சேவையும்   சிறப்பானது. அதைப்போலவே சீர்காழிக்கு அருகில் திருநாங்கூர் மணிமாடக்கோயிலில் தை அமாவாசைக்கு மறுநாள் இரவு நடைபெறும் கருட சேவை மிக மிகச் சிறப்பானது. இந்த கருட சேவையின் பின்னணியில் பல சுவையான செய்திகளை நாம் இத்தொகுப்பில் காணலாம்.

திருநாங்கூர் திருப்பதி

இந்த 108 திருத்தலங்களிலும் இழையோடும் சில அழகான செய்திகளைப் பார்க்கலாம். சில திவ்ய தேசங்கள் இரண்டு இடத்தில் இருக்கும். ஆனால் ஒரே திவ்ய தேசமாகக் கருதப்படும். சில இடங்களில் அருகாமையில் உள்ள கோயில்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு தொகுப்பாகக் கருதுவார்கள். திருநெல்வேலியில் ஆழ்வார்

திருநகரியைச் சுற்றி இருக்கக்கூடிய 9 திருத்தலங்களை ஒன்றாகச் சேர்ந்து “நவ திருப்பதி” என்று அழைப்பார்கள். அதைப்போலவே சீர்காழியில் திருநாங்கூர் என்கின்ற பகுதியைச் சுற்றி இருக்கக்கூடிய 11 திவ்ய தேசங்களை இணைத்து “திருநாங்கூர் திருப்பதி” என்பார்கள். இந்த பதினோரு தலங்களையும் இணைத்த கருட சேவை தான் திருநாங்கூர் கருட சேவை.

திருநாங்கூர் திருப்பதிகள் என்னென்ன?

I. திருநாங்கூருக்குள்ளேயே இருக்கும் கோயில்கள்:

1.திருக்காவளம்பாடி

2.திருஅரிமேய விண்ணகரம்

3.திருவண்புருடோத்தமம்

4.திருச்செம்பொன் செய்கோயில்

5.திருமணிமாடக் கோயில்

6.திருவைகுந்த விண்ணகரம்

II.திருநாங்கூருக்கு வெளியே இருக்கும் கோயில்கள்:

7.திருத்தேவனார்த் தொகை

8.திருத்தெற்றியம்பலம்

9.திருமணிக்கூடம்

10.திருவெள்ளக்குளம்

11.திருப்பார்த்தன் பள்ளி

மூன்று உற்சவங்கள்

இப்பொழுது இந்த உற்சவம் “திருநாங்கூர் கருட சேவை உற்சவம்” என்று உலகப் பிரசித்தி பெற்ற உற்சவமாக திகழ்கிறது. ஆனால் இந்த உற்சவம் ஒரு பரிணாம வளர்ச்சி தானே தவிர, இதனுடைய ஆரம்பகால உற்சவம் கருட சேவை உற்சவம் அல்ல. இந்த உற்சவத்திற்கு பூர்வாங்க உற்சவம் திருமங்கை ஆழ்வாருக்கு நடைபெறும் மஞ்சள் குளி உற்சவம். அந்த உற்சவத்தின் நீட்சிதான் மற்ற உற்சவங்கள். மஞ்சள் குளி உற்சவம், தை அமாவாசை அன்று நடைபெறுகிறது.

தை அமாவாசைக்கு மறுநாள் திருமணிமாடக் கோயில் முகப்பிலே போடப்பட்ட மிகப்பெரிய பந்தலில் ஆழ்வாரின் திருநாங்கூர் திவ்யதேச மங்களாசாசனம் நடைபெறுகின்றது. அன்று மாலை 11 திவ்யதேசத்து எம்பெருமான்களுக்கும் திருமஞ்சனம் நிறைவுபெற்று கருட சேவை உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. எனவே இந்த உற்சவத்தின் பகுதிகளாக மூன்று பகுதிகளைச் சொல்லலாம்.

1. மஞ்சள் குளி உற்சவம் 2. ஆழ்வார் மங்களாசாசன உற்சவம் 3. கருடசேவை உற்சவம்.

அரங்கன் தந்த உற்சவம் இது!

திருவரங்கநாதனுக்கு பல்வேறு உற்சவங்கள் உண்டு. அதில் ஒரு உற்சவம் தை மாதத்தில் காவிரியில் நடக்கக்கூடிய மஞ்சள் குளி உற்சவம். பெருமாளுக்கு மஞ்சள் குளியல் என்று சொல்லப்படும் மஞ்சள் நீரால் அபிஷேகத்தைச் செய்வார்கள். ஒருநாள் பெருமாளுக்கு திருமங்கையாழ்வார் மீது அன்பு அதிகமாகி, அர்ச்சகர்களின் மூலமாக ஆவேசித்து, தனக்கு தரப்படும் உற்சவம் திருமங்கையாழ்வாருக்கும் தரப்பட வேண்டும் என்று நியமித்தார். பெருமாள் எதிரிலேயே, பெருமாளுக்கு, எப்படி மஞ்சள் குளி திருமஞ்சனம் நடக்குமோ,அப்படியே திருமங்கையாழ்வாருக்கும் நடக்கும்படியாக அர்ச்சகர்களை அரங்கனே நியமித்தார்.

அங்குள்ள அர்ச்சகர்கள் திருமங்கையாழ்வார் காலம் வரை அங்கேயே நடத்தி வந்தார்கள். ஆழ்வார் பரம பதத்திற்கு சென்றுவிட்ட பிறகு, அந்த உற்சவம் நின்றுவிட்டது. (ஆழ்வார் பரமபதம் சென்ற இடம் திருவரங்கம் அல்ல. திருநெல்வேலி அருகே திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசம். அங்கே அவருடைய திருவரசு உள்ளது.)

திருநாங்கூருக்கு மாறியது

திருமங்கையாழ்வார் காலத்தோடு நின்றுபோன உற்சவத்தை மறுபடியும் நடத்த வேண்டும் என்று நினைத்தார், திருமங்கையாழ்வாரின் சீடர். இவர் திரு மங்கையாழ்வாருடைய தங்கையின் கணவர். ஸ்ரீரங்கம் காவிரிக்கரையில் நடத்துவது சாத்தியப்படாததால், திருமங்கையாழ்வார் திருவுருவச் சிலையை (விக்கிரகத்தை) திருநாங்கூரில் ஓடும் திருக்காவிரியின் கிளை நதியான மணிகர்ணிகை ஆற்றின் கரையில் தொடர்ந்து நடத்துவதற்கு ஏற்பாடு செய்தார். இப்படித்தான் திருமங்கையாழ்வார் மஞ்சள் குளி உற்சவம் திருநாங்கூர் திவ்யதேசத்திற்கு வந்தது.

தை அமாவாசை அன்று அதிகாலை திருவாலி திருநகரியில் எழுந்தருளியிருக்கும் திருமங்கைஆழ்வார் புறப்பாடாகி, மணிகர்ணிகை நதிக்கரையில் உள்ள மஞ்சள் குளி மண்டபத்தில், மஞ்சள் குளி உற்சவத்தை மேற்கொள்கின்றார். கிட்டத்தட்ட 1000 வருடங்களாக இந்த உற்சவம் மட்டுமே, தை அமாவாசையை ஒட்டி நடைபெற்ற உற்சவம். பிறகு எப்படி கருட சேவை உற்சவமாக மாறியது என்பது தனிக்கதை.

எப்படி கருட சேவை உற்சவம் ஆரம்பித்தது?

சித்திரக்கூடம் விஞ்சிமூர் ஸ்ரீநிவாசாச்சார் சுவாமி என்றொரு வைணவர் இருந்தார். அவருக்கு சாமி ஐயங்கார் என்று பெயர். இவர் வருடாவருடம் ஆழ்வார் திருநகரியில் நடைபெறும் நவ திருப்பதி கருட சேவை உற்சவத்திற்கு சென்று வருவார். இவருக்கு ஒரு ஆசை. ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நவ திருப்பதி கருட சேவை உற்சவம் போல, திருநாங்கூர் திவ்ய தேசங்களை இணைத்து நடத்தினால் என்ன என்று தோன்றியது. ஆழ்வார்களின் தலைவர் நம்மாழ்வார். அவர் அவதரித்த திருத்தலத்தில் 9 திவ்ய தேசங்களின் பெருமாள்கள் ஒன்றிணைந்து, ஆழ்வார் மங்களாசாசனம் பெறுவதும், தொடர்ந்து கருட சேவை உற்சவம் நடைபெறுவதும் மிகவும் சிறப்பாக இருக்கும். ஆழ்வாரில் கடைசி ஆழ்வார் திருமங்கை ஆழ்வார்.

நம்மாழ்வார் அவதரித்த திருத்தலத்திற்கு திருநகரி என்று பெயர். திருமங்கை ஆழ்வார் அவதரித்த திருத்தலத்திற்கும் திருநகரி என்ற பெயர். அது ஆழ்வார்திருநகரி. இது திருவாலி திருநகரி. இந்த ஒற்றுமையை வைத்துக் கொண்டு, நம்மாழ்வாருக்கு நடைபெறுவது போலவே திருமங்கையாழ்வாருக்கும் உற்சவம் நடத்தினால் என்ன என்று நினைத்தார். அந்த விதைதான் இன்றைக்கு கருடசேவை உற்சவத்திற்கு ஆதாரம் ஆகியது.

முதல் கருட சேவை உற்சவம்

திருநாங்கூரில் முதல் கருட சேவை உற்சவம் 1894 ஆம் ஆண்டு தை அமாவாசையன்று தொடங்கியது. இதற்காக ஒரு உற்சவ கமிட்டி அமைக்கப்பட்டது. சித்திரக்கூடம் விஞ்சிமூர் ஸ்ரீநிவாசாச்சார் சுவாமியுடன், கொப்பியம் திரு நாராயணப் பிள்ளை. எடமணல் விஜயராகவலு நாயுடு, வில்லியனூர் வைத்தியநாத அய்யர் போன்ற பலரும் மிகவும் முயற்சி செய்து இதனைத் துவக்கி வைத்தார்கள். இதற்காக கருட வாகனங்களும் அம்ச வாகனமும் செய்யப்பட்டன. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது உலகப் பிரசித்திப் பெற்ற உற்சவமாக மாறிவிட்டது. இந்த உற்சவத்தை பார்ப்பதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், ஏன் வெளிநாடுகளில் இருந்தும் கூட, திருநாங்கூருக்கு வருகை தருகிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம். ஆங்காங்கே அன்னதானங்கள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என்று ஏக ஆரவாரமாக இருக்கும்.

முதல்நாள் மங்களாசாசனம்

21.1.2023 சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு தன் ஆஸ்தானத்திலிருந்து (திருநகரி கோயில்) புறப்படும் திருமங்கையாழ்வார், காலை மூன்று மணிக்கு அவருடைய அவதார ஸ்தலமான திருக்குறையலூர் ஸ்ரீஉக்ரநரசிம்ம பெருமாள் சந்நதியில் மங்களாசாசனம் செய்கிறார். அங்கிருந்து புறப்பட்டு காலை 5 மணிக்கு அவர் 1008 ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ததியாராதனம் செய்த திருமங்கை மடம் ஸ்ரீவீர நரசிம்மர் பெருமாள் சந்நதிக்கு வருகின்றார். அங்கிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு திருக்காவளம்பாடி ஸ்ரீகண்ணன் சந்நதியில் மங்களாசாசனம் செய்கின்றார்.

அங்கு புறப்பட்டு காலை 8 மணிக்கு திருமணிக்கூடம் ஸ்ரீவரதராஜ பெருமாள் சந்நதிக்கு வருகின்றார். அங்கிருந்து புறப்பட்டு 9:00 மணிக்கு திருப்பார்த்தன்பள்ளி கண்ணனை மங்களாசாசனம் செய்கின்றார். அங்கே பதினோரு மணிக்கு புறப்பட்டு பகல் ஒரு மணிக்கு திருநாங்கூர் மணிகர்ணிகை மஞ்சள் குளி மண்டபம் என்ற இடத்திற்கு எழுந்தருளுகின்றார்.

மஞ்சள் குளி உற்சவம்

அங்கே ஒரு மணிக்கு ஆழ்வாருக்கு மஞ்சள்குளி திருமஞ்சனம் நடைபெறும். பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் இடுப்பளவு நீரில் ஆழ்வாரின் பெரிய திருமொழியில் இருந்து ஆழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்த ஆச்சாரியரான திருநறையூர் நம்பியையும், திருவரங்கத்து அழகிய மணவாளனையும் மங்களாசாசனம் செய்கின்றார். (அந்த தலங்களுக்கு ஆழ்வார் பாடிய பாசுரங்களை சேவிப்பார்கள்.) திருவரங்கம், நாச்சியார் கோயில் (திருநறையூர்) திவ்ய தேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாலை மற்றும் பீதாம்பரங்களினால் பரிவட்டம் கட்ட பெற்று ஆழ்வாருக்கு மரியாதை செய்யப்படும்.

பின் மஞ்சள் குளியல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆழ்வாருக்கு ஸஹஸ்ர தாரா மஞ்சள் குளி என்னும் திருமஞ்சனம் நடைபெறுகின்றது. ஸஹஸ்ரதாரை தட்டில் ஆழ்வார் வழிபட்ட சிந்தனைக்கு இனியான் என்னும் பெருமாளின் திருமூர்த்தத்திற்கு செய்யப்படும் மஞ்சள் நீர் முதலில் பெருமாளுக்கு திருமஞ்சனம் ஆகி, பின் ஆழ்வாருக்கும் திருமஞ்சனம் ஆகும். அதற்குப்பிறகு திருப்பாவை சாற்றுமுறை ஆகி, ததிஆராதனம் நடைபெறும் மஞ்சள் குளி மண்டபத்தில் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம்.

விடிய விடிய மங்களாசாசனம்

மாலை 5 மணிக்கு மஞ்சள் குளி மண்டபத்தில் இருந்து புறப்படும் ஆழ்வார் விடிய விடிய பல்வேறு திவ்ய தேசங்களுக்குச் சென்று அந்தந்தப் பெருமாளை தமிழ்ப் பாசுரங்களால் போற்றிப் பாடுவார். ஆழ்வார் கூடவே அத்தனை பக்தர்களும் தூக்கத்தைப் பொருட்படுத்தாது அந்தந்த சந்நதிகளுக்குச் செல்வார்கள். இது மிகவும் சிறப்பாக இருக்கும். காரணம், இந்த மாதிரி அமைப்பு வருடத்திற்கு ஒருநாள் தான் நடக்கும். ஆழ்வார் வருகின்ற வரை சந்நதிகள் நள்ளிரவிலும் திறந்திருக்கும்.

ஆழ்வார் வரிசையாக திருநாங்கூர் மணிமாடக் கோயில் ஸ்ரீநாராயண பெருமாள் சந்நதிக்கும், திருவண்புருடோத்தமம் ஸ்ரீபுருஷோத்தம பெருமாள் சந்நதிக்கும், வைகுந்த விண்ணகரம் ஸ்ரீவைகுண்ட நாதர் சந்நதிக்கும், செம்பொன்செய் கோயில் ஸ்ரீசெம்பொன்அரங்கர் சந்நதிக்கும், திருத்தெற்றியம்பலம் ஸ்ரீபள்ளிகொண்ட பெருமாள் சந்நதிக்கும், திருஅரிமேய விண்ணகரம் ஸ்ரீகுடமாடு கூத்தர் சந்நதிக்கும் சென்று  மங்களாசாசனம் செய்து விட்டு திரும்பவும் விடியல் காலை 4 மணி அளவில் திருமணிமாடக் கோயில் வந்து சேர்வார். காலை நாலரை மணிக்கு அர்த்தஜாம பூஜை நடைபெறும்.

தமிழ் பாடத் தயாராகும் ஆழ்வார்

22-1-2023, ஞாயிற்றுக்கிழமை. காலை 9 மணிக்கு மண்டபத்திற்கு எழுந்தருளும் ஆழ்வாருக்கும் பெருமாளுக்கும் திருப்பாவை சாற்றுமுறை ஆகும். மங்களாசாசனம் நடைபெறும். முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தல் மணி மாடக் கோயில் புஷ்கரணிக்கு முன் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பகல் ஒரு மணிக்கு, அந்தப் பந்தலுக்கு திருநாங்கூர் 11 திவ்ய தேசத்து உற்சவ மூர்த்திகளும், ஆழ்வாரின் தமிழ் கேட்க வந்து, வரிசையாக நிற்பார்கள். பல்லக்கில் புறப்பட்டு திருநாங்கூர் ஸ்ரீநாராயண பெருமாள் சந்நதிக்கு வந்து சேரும் 11 திவ்ய தேசத்து மூர்த்திகளையும், ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வாய்ப்பு வேறு நாளில் கிடைக்காது. பகல் 1 மணிக்கு குமுதவல்லி நாச்சியாருடன் ஆழ்வார் பந்தலுக்கு எழுந்தருளுவார்.

எப்படி நடக்கும் தெரியுமா?

பிற்பகல் 2.00 மணிக்கு மங்களாசாசனம் நிகழ்ச்சி தொடங்கும். பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். ஒவ்வொரு திவ்ய தேசத்து எம்பெருமான்களும் ஆழ்வாருக்கு எதிரே வந்து நிற்பார்கள். ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் பெருமாளை கை கூப்பியபடி வலம் வருவார். அந்த பெருமாளுக்குரிய பாசுரங்கள் பாடப்படும்.  மங்களாசாசனம் முடிந்தவுடன் ஆரத்தி எடுக்கப்படும். பெருமாள் ஆழ்வாருக்கு தனது மாலை, பரிவட்டம், சடாரி மரியாதைகள் வழங்குவார். பின் அந்த பெருமாள் மேளதாளத்தோடு மண்டபத்திற்குள் சென்று விடுவார்.

உடனே அடுத்த பெருமாள் வந்து நிற்பார். திருமங்கையாழ்வாரின் பாசுரங்கள் பாடப்படும். பெருமாள் அவருக்கு மாலை, பரிவட்டம் மரியாதைகள் செய்து, சடாரி வழங்குவார். இப்படி 11 பெருமாள்களும் ஒவ்வொருவரும் ஆழ்வார் எதிரிலே வந்து நின்று, அவருடைய தமிழ் கேட்டு, பகுமானம் தந்துவிட்டு செல்வது கண்கொள்ளாக் காட்சி. மாலை 5 மணி வரை நடக்கும்.

கருட சேவை அலங்காரம்

மங்களாசாசனம் நிகழ்ச்சிக்குப் பிறகு மணிமாடக் கோயில் பிரகார மண்டபத்தில் தனித்தனி அறைகளாக தடுக்கப்பட்ட பகுதிகளில், 11 திவ்யதேசத்து எம்பெருமான்களுக்கும் திருமஞ்சனமாகி, கருட வாகனத்தின் மீது எழுந்தருளச் செய்து அலங்காரம் நடைபெறும். ஒவ்வொரு பெருமாளும் ஒவ்வொரு விதமாக இருப்பார்.  மாலைகள், ஆபரண பீதாம்பர அலங்காரங்கள் வித்தியாசமாக இருக்கும். அத்தனை எம்பெருமான்களும் கருட வாகனத்தின் மீது ஒரே இடத்தில் காட்சி தருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு பெருமாளாக தரிசனம் செய்து கொண்டு வருவார்கள்.

இது கிட்டத்தட்ட இரவு 11 மணி வரைக்கும் நடைபெறும். திருநாங்கூர் திருவிழாக் கோலமாக இருக்கும். திருநாங்கூர் திவ்ய தேசத்தின் அத்தனை வீதிகளில் ஜனத்திரள் அலைகளாக இருக்கும். வாகனங்கள் எல்லாம் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டருக்கு முன்னாலேயே நிறுத்தப்பட்டிருக்கும். திருநாங்கூரில் உள்ளே வருவதும் வெளியில் செல்வதும் கூட கொஞ்சம் கடினமான விஷயமாக இருக்கும். எல்லா இடங்களிலும் பிரசாத விநியோகம் நடந்துகொண்டிருக்கும். சொற்பொழிவுகள் நடந்துகொண்டிருக்கும். கலைநிகழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கும்.

வீதி முழுதும் கருட வாகனத்தில் பெருமாள் சேவை

இரவு 12 மணிக்கு, வாத்திய இசை முழங்க வாண வேடிக்கைகளும் மத்தாப்புகளும் வர்ணஜாலம் நிகழ்த்த, கருட சேவை நிகழ்ச்சி தொடங்கும். முதலில் மண்டபத்திலிருந்து சுவாமி மணவாள மாமுனிகள் சேஷ வாகனத்தில் எழுந்தருளுவார். அவரைத் தொடர்ந்து அன்ன வாகனத்தில் திருமங்கையாழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் எழுந்தருளுவார். அக்காட்சி பார்ப்பதற்குப் பரவசமாக இருக்கும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு திவ்ய தேசத்து பெருமாளும் கருடசேவையாக மண்டபத்தில் இருந்து வெளியில் வந்து நிற்பது கம்பீரமாக இருக்கும். 11 திவ்யதேசத்து எம்பெருமான்களும் அந்த நீண்ட வீதியின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு நிற்பதும் மங்களாசாசனம் செய்வதும் மிகமிக அற்புதமாக இருக்கும். விடிய விடிய இக்காட்சி நடக்கும். இந்த கருடசேவை உற்சவம் விடியல் காலை 5 மணிக்கு நிறைவுபெறும்.

நம் மனதில் இடம் பிடிப்பார்

காலை 5 மணிக்கு திருவந்திக்காப்பு நடந்து அர்த்தஜாமம் நடைபெறும்.  அடுத்த நாள் திங்கட் கிழமை (23 ஆம் தேதி) காலை 9 மணிக்கு காலசந்தி முடிந்து திருமஞ்சனமாகி, திருப்பாவை சாற்றுமுறை முடிந்து, மணிமாடக் கோயிலிலிருந்து திருநகரிக்கு ஆழ்வார் புறப்படுவார். வழியிலே வடுகநம்பி மண்டபம் சேர்ந்து அதற்குப்பிறகு திருவெள்ளக்குளம், திருத்தேவனார் தொகை, திருவாலி லக்ஷ்மி நரசிம்மப் பெருமாள் சந்நதி ஆகிய சந்நதிகளுக்குச் சென்று மங்களாசாசனம் முடித்து, இரவு 12 மணிக்கு திருநகரி ஆஸ்தானம் சேர்வார்.

திருவாலியில் ஆழ்வார் போகும்பொழுது அங்கே ஒரு கருட சேவை உண்டு. அதைப்போலவே திருநகரிக்கு இரவு 12 மணிக்கு ஆழ்வார் சென்று சேரும் பொழுது  ஸ்ரீவயலாலி மணவாளன் கருடசேவை நடைபெறும். இப்படி மூன்று நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணமாக பெருமாள் அத்தனை நாங்கூர் திவ்ய தேசங்களுக்கும் சென்று, தமிழ்பாடி, அந்தந்த பெருமாள் மனதில் இடம் பிடிப்பார். நாம் இந்த நிகழ்ச்சிக்குச் சென்று தரிசனம் செய்யும் பொழுது, அந்த பெருமாளை நம் மனதிலும் இடம்பிடிக்க வைப்பார்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

Related Stories: